நியூயார்க்: உலகின் முன்னணி வர்த்தகப் பத்திரிக்கை நிறுவனமான போர்ப்ஸ், அமெரிக்காவில் செல்ப் மேடு அதாவது சுயமாக வர்த்தகத் துறையில் சாதித்துப் பணக்காரர்களாக இருக்கும் 60 பெண்களைப் பட்டியலிட்டுள்ளது.
அமெரிக்காவின் போட்டி மிகுந்த வர்த்தகத் துறையில் எவ்விதமான பின்புலமும் இல்லாமல் வெற்றிபெற்று எளிதான காரியம் இல்லை.
இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவருமே எவ்வித பின்புலமும் அதாவது, பரம்பரை பணக்காரர், குடும்ப வர்த்தகம் போன்ற வாய்ப்புகள் இல்லாமல் வெற்றிகண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்கள்
போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இப்பட்டியலில் 16 மற்றும் 30 ஆகிய இரு இடங்களைப் பிடித்திருப்பது இந்தியர்கள் என்பது நாம் பெருமை அடைய வேண்டிய விஷயம்.
16வது இடம்
அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் செயல்படும் முன்னணி ஐடி கன்சல்டிங் மற்றும் அவுட்சோர்சிங் நிறுவனமான சின்டல் நிறுவனத்தின் துணை நிறுவனரான நீரஜா சேத்தி போர்ப்ஸ் பட்டியலில் 16வது இடத்தைப் பிடித்துள்ளார்.
சின்டல் நிறுவனம்
இந்நிறுவனத்தைத் தனது கணவரான பார்த் தேசாய் உடன் இணைந்து நீரஜா சேத்தி துவங்கினார். 61 வயதாகும் நீரஜா சேத்தி 1.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
3.6 பில்லியன் டாலர் மதிப்புடைய சின்டல் நிறுவனத்தில் 24,496 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
30வது இடம்
அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சீஇஓ-வான ஜெய்ஸ்ரீ உல்லால் அமெரிக்காவின் செல்ப் மேடு நிறுவன தலைவர்கள் பட்டியலில் 470 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 30 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஜெய்ஸ்ரீ உல்லால்
லண்டனில் பிறந்து டெல்லியில் வளர்ந்த ஜெய்ஸ்ரீ உல்லால் 2008ஆம் அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சீஇஓ-வாகப் பொறுப்பேற்றார், துவக்கத்தில் இந்நிறுவனம் வெறும் 50 ஊழியர்களை வைத்துத் துவங்கப்பட்ட போது அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவனத்திற்கு வருமானம் சுத்தமாக இல்லை.
வளர்ச்சி
2015ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் 838 மில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 2014ஆம் ஆண்டில் இந்நிறுவனம் அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல் இடம்
இந்நிலையில் போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இப்பட்டியலில் ABC சப்ளை எனப்படும் அமெரிக்காவின் மிகப்பெரிய ரூஃபிங் மற்றும் சைடிங் விநியோக நிறுவனத்தின் தலைவரான Diane Hendricks 4.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
53 பில்லியன் டாலர்
இப்பட்டியலில் இடம்பிடித்துள்ள 60 பேரின் மொத்த சொத்து மதிப்பு 53 பில்லியன் டாலர் என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications