மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் உயர்வடைந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திங்கட்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க ஜாப்ஸ் டேட்டா, ஜப்பான் பிரதமர் ஜின்சோ அபே கட்சியின் வெற்றி ஆகியவற்றுடன் சர்வதேச சந்தைத் தாக்கத்துடன் ஒரே நாளில் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை உயர்ந்தது.
இதன் தாக்கத்தில் இருந்து இன்னமும் மீளாத மும்பை பங்குச்சந்தை, இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் 100 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்பட்டது. இதன் பின் நிலையான வர்த்தகத்துடன் முதலீட்டாளர்கள் நுகர்வோர் பணவீக்கம் மற்றும் தொழிற்சாலை உற்பத்தி தரவுகளை எதிர்நோக்கி அதிகளவிலான முதலீட்டைச் செய்தனர்.

இன்றைய வர்த்தக முடிவில் முதலீட்டாளர்களின் அதீத முதலீட்டுக் காரணமாகத் தொடர்ந்து 2வது நாளாகச் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்திலும் சென்செக்ஸ் உயர்ந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 181.45 புள்ளிகள் உயர்ந்து 27,808.14 புள்ளிகளை எட்டியுள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 53.15 புள்ளிகள் உயர்ந்து 8,521.05 புள்ளிகளை அடைந்து இரு சந்தைகளும் இன்று 11 மாத உச்சத்தை எட்டியுள்ளது.
மேலும் ஜூலை 18ஆம் தேதி துவங்க உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் குறித்து முக்கிய ஆலோசனைகளை நடத்தப்பட உள்ளது இதனால் சந்தையில் இருவேறுப்பட்ட நிலை நிலவுகிறது.


Click it and Unblock the Notifications