மும்பை: பிக் பஜார், சென்ட்ரல், புட் பஜார், ஈசோன் எனப் பல்வேறு பெயர்களில் இந்தியா முழுவதும் மிகப்பெரிய சில்லறை வர்த்தகத்தை நடத்தி வரும் பியூச்சர் குரூப் தலைவர் கிஷோர் பியானி, ஆதித்யா பிர்லா குழுமத்தின் ரீடைல் வர்த்தகப் பிரிவான மோர் சூப்பர்மார்கெட் வர்த்தகத்தை முழுமையாகக் கைப்பற்ற முயற்சி செய்து வருகிறார்.
இந்தியாவில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்திடமும், ஸ்டீல் உற்பத்தி டாடா நிறுவனத்திடமும் இருப்பதைப் போலப் பிரிக் மற்றும் மோர்ட்டார் சந்தை வர்த்தகம் பியூச்சர் குரூப் ஆதிக்கத்தில் இருக்கிறது.
கைப்பற்றும் முயற்சி
மக்களிடம் விரைவாகச் சென்றடைய பல முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து உணவு மற்றும் மளிகை பொருட்களின் இணையத்தின் வாயிலாகவும், வர்த்தகக் கிளை மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகிறது பியூச்சர் குரூப்.
இந்நிலையில் இந்தியாவில் தனது வர்த்தகக் கிளை எண்ணிக்கை உயர்த்தத் திட்டமிட்டு, ஆதித்யா பிர்லா ரீடைல் வர்த்தகத்தை வாங்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் கிஷோர் பியானி.
தடையும்.. துவக்கமும்..
பியூச்சர் குரூப் ஏற்கனவே பிர்லா குழுமத்தின் ரீடைல் வர்த்தகத்தை வாங்க முயற்சி செய்து கைவிடப்பட்டது.
ஆனால் இந்த முறை, வர்த்தகத்தை வாங்கவோ அல்லது பியூச்சர் குரூப் வர்த்தகத்தை மோர் சூப்பர்மார்கெட் வர்த்தகத்துடன் இணைக்கவோ திட்டமிட்டுள்ளது பியூச்சர் குரூப்.
வெற்றி தோல்வி
பியூச்சர் குரூப்- பிர்லா குழும வர்த்தக இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை வெற்றி அடையுமா என்றால், 50 சதவீத வாய்ப்புகள் தான் உள்ளது.
காரணம், மோர் சூப்பர்மார்கெட் கடந்த சில மாதங்களாகச் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது. இதனால் ஆதித்யா பிர்லா குழுமம் இந்த ஒப்பந்தத்தை ஏற்கக் கண்டிப்பாக மறுப்பு தெரிவிக்கும் என்பது தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தின் கணிப்பு.
5 வருடத்தில் 4 நிறுவனங்கள்
இந்த டீல் வெற்றி பெற்றால் பியூச்சர் குரூப் கடந்த 5 வருடத்தில் 4 நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிக் ஆப்பிள், நீல்கிரிஸ் மற்றும் பார்தி ரீடைல் ஆகிய நிறுவனங்களைக் கடந்த 5 வருடத்தில் கிஷோர் பியானி தலைமையிலான பியூச்சர் குரூப் கைப்பற்றியுள்ளது.
ஆதித்யா பிர்லா ரீடைல்
ஆதித்யா பிர்லா குழுமத்தின் ரீடைல் வர்த்தகப் பிரிவில் மிக முக்கிய வர்த்தகமாக ஆடை விற்பனை உள்ளது. மொத்த ரீடைல் வர்த்தகத்தில் சுமார் 30 சதவீதம் ஆடை விற்பனையைச் சார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உணவு மற்றும் மளிகை பொருட்களை வர்த்தகம் மிகவும் குறைவான அளவிலேயே உள்ளது. இதனால் இப்பிரிவின் வர்த்தகத்தை அதிகரிக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டாப் 4
இந்தியாவில் சூப்பர்மார்கெட் தொடர் நிறுவனங்களில் 4வது இடத்தில் உள்ளது ஆதித்யா பிர்லாவின் ரீடைல் வர்த்தகம்
முதல் இடத்தில் பியூச்சர் குரூப், ரிலையன்ஸ் ரீடைல், மற்றும் டீமார்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளது.
கடன் அளவுகள்
ஆதித்யா பிர்லா ரீடைல் வர்த்தகப் பிரிவின் மொத்த கடன் அளவு 5,232 கோடி ரூபாயாக உள்ளது. 2014-15ஆம் நிதியாண்டில் இந்நிறுவனம் 571 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்தது.
பியூச்சர் குரூப் நிறுவனத்தின் கடன் அளவு 4,941 கோடி ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்புகள்..
ஆனால் இந்த இணைப்பின் மூலம் இரு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளது. காரணம் ரிலையன்ஸ் ரீடைல் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய அதிகளவிலான முதலீட்டைச் சந்தையில் இறக்க உள்ளது.
இதனால் சந்தையில் நிலவும் போட்டியும், வர்த்தகப் பாதிப்பையும் சமாளிக்க இக்கூட்டணி வர்த்தகம் அதிகளவில் உதவும்.


Click it and Unblock the Notifications