தொடர்ந்து உயர்ந்து வந்த மும்பை பங்குச்சந்தையில் பல்வேறு காரணங்களினால் இன்று 225 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது.
நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள தொய்வு முதலீட்டுச் சந்தையைப் பெரிய அளவில் பாதித்துள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா வட கொரியா நாடுகளின் முக்கியக் கூட்டத்தால் இன்று ஆசிய சந்தையில் மந்தமான வர்த்தகம் நிலவியது.
பங்குச்சந்தை விடுமுறை
திங்கட்கிழமை அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் பங்குச்சந்தையில் விடுமுறையினால் இன்று ஆசிய சந்தையில் அதிகளவில் குறைந்தது. மேலும் இன்றைய வர்த்தகத்தில் அதிகளவிலான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை விற்பனை செய்த காரணத்தால் மதிய நேர வர்த்தகத்தில் அதிகளவிலான சரிவை மும்பை பங்குச்சந்தை சந்தித்தது.
வங்கி பங்குகள்
மதிய நேர வர்த்தகத்தில் ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, யெஸ் வங்கி மற்றும் கோட்டா மஹிந்திரா வங்கி ஆகியவற்றில் அதிகளவிலான பங்கு விற்பனை சூழ்நிலை உருவாகியது.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 216.24 புள்ளிகள் சரிந்து 34,949.24 புள்ளிகளை அடைந்தது. இதன் மூலம் சென்செக்ஸ் 35,000 புள்ளிகள் என்ற வலிமையான நிலையில் இருந்து இறங்கியுள்ளது.
நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று சரிவை சந்தித்தது. செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் நிஃப்டி 55.35 புள்ளிகள் சரிந்து 10,633.30 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 2.26 சதவீதமும், பார்தி ஏர்டெல் 1.08 சதவீதமும், இன்போசிஸ், டிசிஎஸ், ஹீரோ மோட்டோ கார்ப், எல் அண்ட் டி, பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்கள் கணிசமான உயர்வை அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications