நகரமயமாதல் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. கிராமங்களை விட்டு மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வருமானம் உயர்கிறதா, வாழ்க்கைத்தரம் மாறுகிறதா என்பதைப் பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. நாட்டுக்கு பண வீக்கப் பிரச்சினை என்றால் வீட்டுக்கு விலைவாசிப் பிரச்சினை. நாடு வரிகளின் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விடும்.
மக்கள் விதியைத்தானே நம்ப வேண்டியிருக்கிறது. ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் சம்பாதித்தால்தான் அந்தக் குடும்பம் தன்னிறைவு பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் இந்த நிலவரம் இப்போது கலவரமாகி வருகிறது. பெரும்பாலான இந்தியப் பெண்கள் வேலைக்குச் செல்ல விரும்பவில்லை என்று ஒரு தரவு ஒன்று கூறுகிறது.
வளர்ச்சி - வீழ்ச்சி
2011- 12 ஆண்டு நடத்தப்பட்ட மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பணிக்குச் செல்லும் திருமணமான இந்தியப் பெண்களின் பங்களிப்பு வெகுவாகச் சரிந்துள்ளது. இதற்கு முன்னர் அவர்களின் கூட்டுப் பங்களிப்பால் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 284.3 பில்லியன் டாலர்களில் இருந்து 1.8 டிரில்லியன் டாலர்கள் வரை அதிகரித்திருந்தது. தனிநபர் வருமானம் 340 டாலரிலிருந்து 148 டாலராக வளர்ச்சியடைந்திருந்தது. 2011 - 12 க்குப் பிறகு பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பு 47 சதவீதத்திலிருந்து 37 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.
திருமணத் தண்டனை
அதேநேரம் 2011-12 க்குப் பிறகு திருமணமாகாத இளம்பெண்களும், முதிர் கன்னிகளும் பணியில் அதிக அளவில் பங்களிப்பு செய்கின்றனர். இது 37 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக அதிகரித்துள்ளது. ஆனால் திருமணமான பெண்களின் நிதிச்சுதந்திரம் பறிக்கப்பட்டுப் பணியிலிருந்து விலகி திருமணத் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். சில இடங்களில் பணியிலிருந்து நீக்கப்படும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது.
ஆணாதிக்கம் ஒரு தடை
மகப்பேறு விடுப்பு, தொலைதூர வேலைக்கு வசதி, நல்ல போக்குவரத்து ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், திருமணமான பெண்களைப் பணிக்கு மீண்டும் திரும்ப வைக்க முடியும். ஆனால் பாரம்பரியங்களைக் கடைப்பிடிக்கும் குடும்பங்களில் உள்ள பெண்கள் திருமணமான பின்பு, குழந்தை வளர்ப்பு, முதியவர்கள் பராமரிப்பு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த தொடங்கி விடுகின்றனர்.
அவர்கள் பணியிடத்தில் நேர்மை இல்லை என்றும் நினைக்கத் தொடங்கி விட்டார்கள். சில குடும்பங்களில் நிலவும் ஆணாதிக்கச்சூழல் பெண்களை வேலைக்குச் செல்ல மறுக்கிறது காலணிகளை வாங்க கூடக் கணவனை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர்கள் கொண்டு வரப்படுகின்றனர்.
சமவேலை - சமமில்லாத ஊதியம்
வேலை செய்து வருவாய் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் இந்தியப் பெண்களின் மனநிலையாக இருக்கிறது. ஆனால் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்காத போக்கால் அவர்கள் பணியிலிருந்து விலகி விடுகின்றனர். இதில் பலர் திருமணமான பின் வீட்டில் உள்ள கடமைகளை விட்டுக் கொடுக்க மறுக்கின்றனர்.
பெண்கள் வேலைக்குத் திரும்பத் தீர்வு
பெண்களின் பணிப் பங்களிப்பை தூண்டுவதற்குச் சில ஆக்கப்பூர்வமான மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியமாகிறது. பாதுகாப்பான பயணத்தையும், பணியிடத்தையும் உறுதி செய்ய வேண்டும். பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கும் பெண்களுக்கு வேலையில், அதற்கேற்றவாறு பணியினை ஒதுக்க வேண்டும். வெளிப்படையான பால்பேதமற்ற வகையில் பெண்களை நடத்த வேண்டும் என்று அந்தத் தரவுகளின் இறுதியில் தீர்வு சொல்லப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications