ஊறுகாய் கம்பெனி கூட இப்படியொரு நெருக்கடியைச் சந்தித்ததாக கேள்விப்பட்டிருக்க முடியாது. கடந்த ஓராண்டு காலமாக அப்படியொரு நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது ஜெட் ஏர்ஸ் நிறுவனம். நரேஷ் கோயலின் சாதகக் கட்டம், எந்த பரிகாரங்கள் செய்தாலும் நிவர்த்தி செய்ய முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது.
ஆசிரியர்கள்
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மாதிரி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானிகளும், ஊழியர்களும் ஊதிய உயர்வு கோரிக்கைகளை முன் வைக்கவில்லை. சம்பளமே இல்லை என்பது தான் அவர்களின் போராட்டமாக உள்ளது. இந்தப் பிரச்சினையால் நேற்று மட்டும் 14 விமானங்களை ரத்து செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பு
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் குறிப்பிட்ட பகுதி ஊழியர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் வரை ஊதியம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம் விமானிகள் பொறியாளர் உள்ளிட்டோருக்கு நிதி நெருக்கடி காரணமாக அக்டோபர் மாதம் முதல் ஊதியத்தை வழங்க அந்த நிறுவனத்தால் இயலவில்லை. இதனால் விமானிகள் பணியைப் புறக்கணித்ததால், கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இது போன்றதொரு பணிச்சூழலில் வேலை பார்க்க விரும்பவில்லை என்று நரேஷ் கோயலுக்கு விமானிகள் கடிதம் மூலம் தங்கள் ஆதங்கத்தை கொட்டியுள்ளனர்.
பயணிகளுக்கு இழப்பீடு
14 விமானங்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு குறுந்தகவல் மூலம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தகவல் அனுப்பியது. மாற்று ஏற்பாடு செய்து தரப்படாத பட்சத்தில் இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.
பேச்சு வார்த்தைக்கு அழைப்பு
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடர்ந்து இயங்க ஒத்துழைக்க வேண்டும் என்று ஊழியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். விரைவில் நிலுவையில் உள்ள சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம், ஊழியர்கள், விமானிகள் மற்றும் பொறியாளர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கத் திட்டமிட்டுள்ளது. நல்லது நடந்தால் சரி.


Click it and Unblock the Notifications