பெங்களூர்: பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, காக்னிஜன்ட்டில் பெரும் மாற்றங்கள் தொடர்ந்து வருகிறது. அதில் லேட்டஸ்ட், அந்த நிறுவனத்தின் செயல் துணை தலைவரும், உலகளாவிய டெலிவரி தலைவருமான, தபஷிஷ் சாட்டர்ஜி அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறியுள்ளார். இவர் காக்னிஜன்ட் நிறுவனத்தில் 23 வருடங்கள் பணியாற்றியவர்.
சாட்டர்ஜி, காக்னிஜன்ட் நிறுவனத்தின் வங்கி மற்றும் நிதி சேவைகள் செயல்பாடு வளர்ச்சி பெற அடிப்படை காரணமாக இருந்தவர். நிறுவனத்தின், 35 சதவீத வருமானத்தில், இந்த துறைகளின் பங்களிப்பு இருந்ததை மறுக்க முடியாது.

காக்னிஜன்ட் நிறுவனம் தனது ஜூனியர் மட்டத்திலான ஊழியர்கள் பலரை வருடாந்திர ஊதிய உயர்வு நேரத்தில் வெளியேற்றியுள்ளது. இதுவரை 150 ஊழியர்களை அந்த நிறுவனம் வெளியேற்றியுள்ள நிலையில், அது 500 ஆக அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.
காக்னிஜன்ட் நிறுவனத்திடம் இதுதொடர்பாக கேட்டபோது, யூகங்கள் மற்றும் வதந்திகள் தொடர்பாக நாங்கள் பதில் சொல்ல விரும்பவில்லை. புதிய தலைமைச் செயல் அதிகாரி பதவியேற்கும்போது, சில மாற்றங்களை தவிர்க்க முடியாது என்பது உண்மைதான்.
முதலாவது காலாண்டு வருமானம் தொடர்பாக, நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டபோது, வளர்ச்சிக்காக ஃபிட்டாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் சேர்த்தே கூறியிருந்தோம். ஆரோக்கியமான செலவீன நடைமுறை இதற்கு அவசியம், இதுதொடர்பாக இன்னும் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இவ்வாறு அந்த நிறுவனம் தெரிவித்தது.
காக்னிஜன்ட் தலைமைச் செயல் அதிகாரியாக ப்ரையன் ஹம்ப்ரைஸ் கடந்த ஏப்ரல் 1ம் தேதி பொறுப்பேற்றார். இதன்பிறகுதான் அந்த நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகின்றன.
இதுபற்றி அமெரிக்காவை சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறை ஆலோசனை நிறுவனம் ஒன்றின் தலைமைச் செயல் அதிகாரி ஃபில் பெர்ஷ்ட் கூறுகையில், பிரச்சினைகள் மிக தீவிரமாகிவிட்ட பிறகு பன்றியின் உதட்டில் லிப்ஸ்டிக் தடவிக் கொண்டிருக்க முடியாது. மொத்த பண்ணையையுமே மாற்றியமைக்க வேண்டும். அல்லது, ஜோம்பிகள் நிலைதான் பண்ணைக்கு ஏற்படும் என்றார்.


Click it and Unblock the Notifications