சென்னை : கடந்த சில தினங்களாக சிறிய அளவில் ஏற்ற இறக்கம் கண்டு வந்த தங்க ஆபரணம் விலை, இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு 400 ரூபாய் ஏற்றம் கண்டுள்ளது.
அதிலும் சென்னையில் இன்று கிராமுக்கு 50 ரூபாய் ஏற்றம் கண்டு, சவரனுக்கு 28,848 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம் , பங்கு சந்தை வீழ்ச்சி, ரூபாயின் மதிப்பு சரிவு என உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் விலை உயர்ந்தாலும், குறிப்பாக இந்தியாவைப் பொறுத்த வரையில் பண்டிகைகால சீசன் நெருங்கி வருவதையடுத்து, தேவையும் சற்று அதிகரித்துள்ளதால் விலை சற்று ஏற்றம் கண்டு வருகிறது.
ஏனெனில் பொதுவாக இந்த பண்டிகைகாலம் என்றாலே, இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரிக்க தொடங்கி விடும். இந்த நிலையில் என்னதான் விலை அதிகரித்தாலும் வரியை அதிகப்படுத்தினாலும், நம்மவர்கள் தங்கத்தின் மீதான ஈடுபாட்டினால், தங்கம் வாங்குவது குறைய போவதில்லை. தற்போது ஊழியர்கள் வாங்கும் போனஸ், ஊதிய உயர்வு இதுபோன்ற தொகைகளை தங்கத்தில் முதலீடு செய்வது தான் பெரும்பாலானோரின் பழக்கம். அதிலும் தமிழகத்தை பொறுத்தவரை சொல்லவே வேண்டாம். இது தான் நம் மக்களின் முதல் ஆப்சன்.
இந்த நிலையில் இந்த பண்டிகைகாலத்தில் தேவை அதிகரித்துள்ளதையடுத்து விலை அதிகரித்துள்ளது.மேலும் பருவமழையும் அதிகரித்துள்ள நிலையில் கிராமப்புறங்களிலும் மக்களின் கையில் காசு நன்றாக புழங்க தொடங்கியுள்ளது.
இதை ஊக்குவிக்கும் விதமாக சர்வதேச சந்தையில் விலையை ஊக்குவிக்கும் விதமாகவே பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் உற்பத்தி குறித்த குறியீடானது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை கண்டுள்ளன என்றும், இதே சீனாவுடனான நீடித்த பதற்றங்களுக்கு நடுவில், அமெரிக்கா இப்படி ஒரு பிரச்சனையினை மேற்கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதனால் அமெரிக்காவின் வளர்ச்சியை மேம்படுத்தவும், அமெரிக்கா ஃபெடரல் வங்கியினை மீண்டும் ஒரு வட்டி குறைப்பை செய்யவேண்டும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி கடுமையாக சாடியுள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவின் பொருளாதாரம் மேம்படையும் வரையில் தங்கத்தின் விலையானது சற்று வலுவானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் ஏற்கனவே தேவையும் அதிகரித்துள்ள நிலையில், விலையும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதே வெள்ளியின் விலையும் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஒரு கிராம் வெள்ளியின் விலையானது 40 பைசா அதிகரித்து, கிராமுக்கு 48.20 ரூபாயாகவும், இதே கிலோ வெள்ளியானது 48,200 ரூபாய்க்கும் விற்பனையாகியும் வருகிறது.
சர்வதேச அளவில் நிலவி வரும் தன்மையால் வெள்ளியின் விலை பெரிய அளவில் மாற்றம் இல்லையென்றாலும், தமிழகத்தை பொறுத்தவரை வெள்ளி ஆபரணங்களின் விற்பனை இந்த விழாக்கால சீசனில் விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் சற்று விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications