மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 31) டெல்லியில் 46 வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.
2022-23ஆம் நிதியாண்டு பட்ஜெட்க்கு முன்பு நடக்கும் ஜிஎஸ்டி கூட்டம் என்பதால் அனைத்துத் தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த முக்கியமான கூட்டத்தில் ஜிஎஸ்டி வரிப் பகுப்பாய்வு, முன்மொழியப்பட்ட ஜவுளி ஜிஎஸ்டி உயர்வு தொடர்பான மாநில அமைச்சர்கள் குழுவின் அறிக்கை மற்றும் பிற முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
கலால் வரி, சேவை வரி, வாட் வரி எனப் பலவற்றை நீக்கிவிட்டு ஜிஎஸ்டி என்ற ஒற்றை வரியை ஜூலை 1, 2017ஆம் தேதி நடைமுறைப்படுத்தினாலும், இன்று நடக்கும் 46வது ஜிஎஸ்டி கூட்டம் வரையில் தொடர்ந்து மாற்றங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கியமான விஷயங்கள் இதுதான். மேலும் பல தலைவர்கள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு முக்கியமான கோரிக்கையும் வைத்துள்ளனர்.
இழப்பீட்டு செஸ்
கோவிட்-19 தொற்று மூலம் தங்களது வருவாய் அளவீடுகள் அதிகளவில் பாதித்துள்ளதால், ஜிஎஸ்டி இழப்பீட்டுச் செஸ் வரி கூடுதலாக ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் எனப் பல மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளது.
மத்திய அரசின் திட்டங்கள்
மேலும் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களில், மத்திய அரசின் பங்கீடு அதாவது நிதி பங்கீடு அளவுகள் உயர்த்தப்பட வேண்டும் என்றும் பல மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளது.
ஜிஎஸ்டி அமலாக்கம்
நாடு முழுவதும் ஒரே வரி என்ற பெயரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கம் செய்யப்பட்ட பின் மாநில அரசுகள் விதிக்கும் வரிகளான வாட் உள்ளிட்டவை நீக்கப்பட்டது. இதன் விளைவாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறைக்கு மத்திய அரசு வழங்கி வரும் ஜிஎஸ்டி இழப்பீடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முடிவடைகிறது. இதைப்பற்றியும் இன்றைய கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளது.
சத்தீஸ்கர் முதல்வர்
ஜிஎஸ்டி வரி அமைப்பு வந்த பின்பு மாநில அரசுகளுக்கு அதிகப்படியான வரி வருவாய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. வரும் ஆண்டில் மாநிலத்திற்குச் சுமார் 5,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு எவ்விதமான ஏற்பாடும் செய்யவில்லை, எனவே ஜிஎஸ்டி இழப்பீடு மானியத்தை ஜூன் 2022 க்குப் பிறகு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர வேண்டும் என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் கூறினார்.
ராஜஸ்தான் கல்வி அமைச்சர்
ராஜஸ்தான் கல்வி அமைச்சர் சுபாஷ் கர்க், இழப்பீட்டுச் செஸ் பிரிவு பலன்களை 2026-27 வரை நீட்டிக்க வேண்டும் என்பது மாநிலங்களின் சரியான கோரிக்கையாகும், அதை மத்திய அரசு கட்டாயம் பரிசீலிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
சுபாஷ் கர்க்,
மேலும் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்றும் ராஜஸ்தான் கல்வி அமைச்சர் சுபாஷ் கர்க் கோரிக்கை விடுத்துள்ளார்.
பழனிவேல் தியாகராஜன்
தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி இழப்பீட்டுச் செஸ் பிரிவு பலன்களை அடுத்த 2 வருடத்திற்காவது நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களில், மத்திய அரசின் பங்கீடு உயர்த்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா
தெலுங்கானா தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமராவ் ஜிஎஸ்டி விகிதங்களை உயர்த்தும் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications