இந்திய பங்குச்சந்தை நவம்பர் மாத துவக்கத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், இன்று திடீர் யூ-டர்ன் அடித்தது போல் மோசமான சரிவை பதிவு செய்து 5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பு குறைந்துள்ளது. இதன் மூலம் இந்தியச் சந்தையில் பதிவான நவம்பர் வளர்ச்சிக்கு இதுதான் என்ட் கார்டா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு நேற்றைய வர்த்தக முடிவான 82,532 புள்ளிகளில் இருந்து இன்றைய வர்த்தகத்தில் 751.53 புள்ளிகள் சரிந்து 81,780.47 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 250 புள்ளிகளுக்கும் அதிகமாகக் குறைந்து 25,141.80 புள்ளிகளைத் தொட்டு உள்ளது.

இந்த மோசமான சரிவு மூலம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாய் வரையில் சரிந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் லார்ஜ் கேப், ஸ்மால் கேப், மிட் கேப் என அனைத்து பிரிவுகளையும் சரிவுக்குத் தள்ளியுள்ளது. இதேபோல் துறைவாரியாகவும் சரிவு பாதையில் உள்ளது. இதில் முக்கியமாகத் தங்கம் விலையின் தொடர் சரிவு காரணமாகத் தங்க நகைக் கடைகள் பங்குகள், நகை கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்கள், வங்கிகள் அதிகளவில் பாதித்துள்ளது.
ஆனால் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு பிரிவான கட்டுமானம், மின்சாரம், ஆட்டோமொபைல் துறையில் முன்னணி நிறுவனங்கள் மட்டும் இன்றைய மோசமான சரிவில் இருந்து தப்பித்துள்ளது. மேலும் ஐடி நிறுவன பங்குகள் தொடர்ந்து பெரும் சரிவுக்குத் தள்ளப்பட்டு வருகிறது.
இன்றைய சரிவுக்கு மிக முக்கியமான காரணம், செபி எடுக்கப்போகும் முக்கிய நடவடிக்கையின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி, இந்திய பங்குச்சந்தையில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் மார்ஜின் டிரேடிங் வசதியை (MTF) திருத்தி அமைக்க முயற்சி செய்து வருகிறது.
செபி அமைப்பின் புதிய கட்டமைப்பில், மார்ஜின் டிரேடிங் வசதியின் (MTF) வரம்புகளை ஒரு நிறுவனப் பங்கின் பொதுச் சந்தைப் பங்கு இருப்பு அதாவது Free Float அடிப்படையில் நிர்ணயம் செய்யலாம் என ஆலோசனை செய்து வருவதாக இவ்மைப்பின் தலைவர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுவரையில் எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை என்பதையும் துஹின் காந்த பாண்டே உறுதிப்படுத்தியுள்ளார்.
மார்ஜின் டிரேடிங் வசதி அடைப்படையிலான வர்த்தகம் மூலம் முதலீட்டு சந்தையில் பெரும் swing ஏற்படும் காரணத்தால், இதை கட்டுப்படுத்தும் நோக்கில் செபி இந்த நடவடிக்கையை எடுக்கத் திட்டமிட்டு உள்ளது. செபி தனது திட்டத்தைச் செயல்படுத்தினால் மிட்கேப், ஸ்மாஸ்கேப் பங்குகளில் நடக்கும் அதிரடி மாற்றங்கள் குறையும் என்பதால் பங்குச்சந்தை இன்று தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications

