டெல்லி: இந்தியாவில் மறைமுக வரி விதிப்பை மொத்தமாக மாற்றி அமைத்த ஜிஎஸ்டி தொடர்ந்து மெருகேற்றப்படும் அவசியம் இருக்கும் காரணத்தால் ஜிஎஸ்டி குறித்து முடிவெடுக்கும் உச்சக்கட்ட அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சிலின் 53வது கூட்டம் ஜூன் 22, 2024 அன்று டெல்லியில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் வரி விதிப்புகள், முக்கிய நடவடிக்கைகள், இன்புட் டாக்ஸ் கிரெடிட் (ITC) சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

ஜிஎஸ்டி கவுன்சில் என்றால் என்ன?: ஜிஎஸ்டி கவுன்சில் என்பது மத்திய நிதியமைச்சர் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவாகும். இது ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) தொடர்பான கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர்மட்ட அமைப்பாகும்.
கூட்டத்தின் முக்கியத்துவம்: இது லோக்சபா தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் என்பதாலும், ஜிஎஸ்டி வரி முறையை சீர்திருத்தம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் வேளையில், தேர்தலுக்கு பின்பு நடக்கும் இக்கூட்டம் கூடுதல் வலிமை பெறுகிறது.
ஜிஎஸ்டி கவுன்சில்-ன் 52வது கூட்டம் 2023 அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்தில், ஆன்லைன் கேமிங், கேசினோ மற்றும் குதிரை பந்தயங்களுக்கு 28% வரி விதிக்க கவுன்சில் முடிவு செய்தது முக்கியமான நடவடிக்கையாக இருந்தது. இந்த நிலையில் இக்கூட்டத்தில் எதிர்பார்க்கப்படும் முக்கிய விவாதங்கள்.
வரி விகிதங்கள்: ஜிஎஸ்டி வரி விதிப்புகளையும், ஜிஎஸ்டி வரி பலகைகளையும் ஒழுங்குபடுத்துவது குறித்து கவுன்சில் விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒரே மாதிரியான வரி அமைப்பு உருவாக்கப்படலாம்.
இணக்க நடவடிக்கைகள்: வரி செலுத்துவதில் இருக்கும் இடர்பாடுகளை முழுமையாகக் களைந்து, வரி வசூலை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல் இருக்கும். குறிப்பாக வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்த நடைமுறைகள் விவாதிக்கப்படும்.
பிற முக்கியமான விஷயங்கள்: ஊழியர் பங்கு உரிமைத் திட்டத்தின் (ESOP) வரிவிதிப்பு குறித்த தெளிவுபடுத்தல்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இன்புட் டாக்ஸ் கிரெடிட் (ITC) சீர்திருத்தங்கள் தொடர்பான விதிகளில் மாற்றங்கள் செய்யப்படலாம். கார்ப்பரேட் உத்தரவாதத்திற்கான வரி விதிப்பு குறித்த கலந்துரையாடல் இருக்கலாம்.


Click it and Unblock the Notifications