ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட கடற்கரையில் மக்கள் தங்கவேட்டை நடத்தி வருகின்றனர். கேட்பதற்கு நம்ப முடியாத செய்தியாக தான் இருக்கும். ஆனால் உப்பாடா பகுதியில் இருக்கும் கடற்கரைக்கு சென்று பார்த்தால் இதை நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள உப்பாடா கடற்கரையில் தங்க துகள்களும் ,தங்க நகைகளும் கிடைப்பதாக மக்கள் கூறுகின்றனர். காக்கிநாடா வருவாய் வட்டத்திற்குள் அமைந்திருக்கக் கூடிய இந்த கடற்கரையில் மக்கள் தினமும் சென்று சல்லடை போட்டு தங்க துகள்களை தேடி எடுக்கின்றனர்.

உப்பாடா கடற்கரையை சுற்றியுள்ள மீனவர்களும் அந்த கடற்கரைக்கு வந்து செல்லும் மக்களும் அவ்வப்போது அங்கிருக்கும் கடற்கரை மணலில் சிறு சிறு தங்க துகள்களையும் ,தங்கமணிகளையும் கண்டறிகின்றனர். சில சமயங்களில் தங்க நகைகள் கூட கிடைப்பதாக அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கூறுகின்றனர்.
டந்த நவம்பர் மாதம் நிவர் புயல் தமிழகத்தை தாக்கி விட்டு ஆந்திராவிற்கும் சென்றது. அப்போது புயல் காரணமாக உப்பாடாவில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அப்போது கடற்கரையிலிருந்து ஏராளமான தங்கமணிகள் கிடைத்ததாக அந்த பகுதி மீனவர்கள் கூறுகின்றனர். இதனை அடுத்து நாள்தோறும் தங்கத்தை தேடி அந்த கடற்கரைக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாம்.
இவ்வாறு உப்பாடா கடற்கரை மணலில் இருந்து தங்க துகள்கள், சிறு சிறு தங்க நகைகள் கிடைக்கின்றன அவற்றை சேகரித்து கடைகளில் மக்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு முன்பு இந்த பகுதியில் கடல் சீற்றத்தால் அங்கிருந்து வீடுகளும் கோவில்களும் அடித்து செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அவ்வாறே கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட பொருட்களில் இருந்து தங்க நகைகளும் கோவில்களில் இருந்த தங்க நகைகள் உள்ளிட்டவையும் இவ்வாறு புயல் மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் காலங்களில் கரைகளுக்கு வருவதாக அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகின்றனர். அவற்றையே இவர்கள் சேகரித்து விற்பனை செய்கிறார்கள்.
இதற்கு முன்பு இந்த பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் புதிதாக வீடு கட்டும்போது அல்லது கோயில்களை கட்டும்போது இந்த கடற்கரை பகுதியில் வந்து தங்களால் இயன்ற அளவுக்கு தங்கத்தை வாங்கி புதைத்து விட்டு செல்வார்களாம் .
அந்த தங்கம் கூட தற்போது கடலில் இருந்து அடித்து கரையில் கொண்டு வந்து விடப்படுவதாக சொல்லப்படுகிறது. இங்கே கிடைக்கக்கூடிய தங்கத்தை மக்கள் கடைகளில் விற்பனை செய்து சிறு சிறு தங்க துகள்களுக்கு 300 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரையிலும் சிறு நகைகளுக்கு 2000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரையிலும் பணம் பெறுகின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications