பொதுவாக வேறு நிறுவனம் மாற வேண்டும் என கூறுபவர்களிடம் என்ன காரணம் என கேட்டால் ஊதிய உயர்வு, பதவி உயர்வு, சொந்த ஊரில் வேலை போன்றவற்றை கூறுவார்கள். ஆனால் இங்கு ஒருவர் இலவச உணவு கிடைத்தால் போதும் என்கிறார்.
இதுவும் நியாயமான காரணம் தானே என நினைக்காதீர்கள். அவரது ஆண்டு சம்பளமே 43.5 லட்சம் ரூபாய். ஆம் இவ்வளவு சம்பளம் வாங்கும் ஒருவர், தனக்கு நான்கு வேளையும் நல்ல உணவினை இலவசமாக தரும் நிறுவனம் இருந்தால் சொல்லுங்கள் என கோரிக்கை வைத்திருப்பது தான் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது.

கிரேப்வைன் தளம்: கிரேப்வைன் என்பது பல்வேறு துறை சார்ந்த வேலைகள் மற்றும் ஊதியங்கள் தொடர்பான வெளிப்படையான விவாதத்திற்கு வழிவகுக்கும் ஒரு செயலி. இந்த செயலியின் நிறுவனரான சுமைல் திரிபாதி தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார்.
கிரேப்வைன் தளத்தில் ஒருவர் முன் வைத்த கோரிக்கை தான் அது. இலவசமாக நான்கு வேளையும் நல்ல உணவு தரக்கூடிய நிறுவனம் இருந்தால் எனக்கு பரிந்துரை செய்யுங்கள் என அந்த நபர் அதில் கேட்டிருந்தார். தற்போது சமூகவலைதளங்களில் இது தான் டிரெண்டாக உள்ளது.
ஆண்டுக்கு ரூ.43.5 லட்சம் சம்பளத்தை விட தயாரா?: கிரேப்வைன் தளத்தில் வேலை கேட்டு பதிவு செய்திருந்த அந்த நபர், ஆண்டுக்கு 43.5 லட்சம் ரூபாயை சம்பளமாக பெறுபவர்.
தான் தினமும் ஜிம்முக்கு செல்பவன், எனவே நல்ல புரதச்சத்து மிகுந்த உணவை 4 வேளைகளுக்கு இலவசமாக தரக்கூடிய நிறுவனங்கள் இருந்தால் எனக்கு பரிந்துரை செய்யுங்கள், ஏனெனில் இங்கே உணவுக்காகவே நான் அதிகம் செலவிட நேர்கிறது என அதில் கூறி இருக்கிறார்.
இதை பார்த்த சமூகவலைதளவாசிகள் வாயடைத்து போயுள்ளனர். 43 லட்சம் ரூபாய் ஊதியத்தை , நான்கு வேளை சாப்பாடுக்காக விட்டுக் கொடுக்க தயாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வேலை மாறுவதற்கு உணவு தான் காரணமா?: திரிபாதி இந்த பதிவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்ததை அடுத்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது. ஸோமேட்டோவில் இணைந்தால் உணவும் கிடைக்குமே என கிண்டலாக சிலர் பதில் அளித்துள்ளனர்.
இவ்வளவு சம்பளம் கிடைத்தும் உணவுக்கு அதிகம் செலவிடுவதாக புலம்புகிறாரே ஏன் என புரியவில்லை என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர் இந்த சம்பளத்தை வைத்து அவரே சொந்தமாக ஃபிட்னஸ் பிராண்டை தொடங்கலாமே என யோசனைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Story written by: Devika Manivannan


Click it and Unblock the Notifications