விசாகப்பட்டினம்: உங்கள் பெயரில் போதைப்பொருள் வழக்கு இருக்கிறது என பொய் கூறி ஓய்வு பெற்ற தனியார் துறை அதிகாரியிடம் இருந்து 85 லட்சம் ரூபாயை நூதன முறையில் மோசடி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மை காலமாக கொரியர் வந்திருப்பதாகவும், உங்கள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும் பொய்யான தகவல்களை கூறி வயதானவர்களிடமிருந்து குறிப்பாக ஓய்வு பெற்று வங்கியில் தங்களது ஓய்வூதிய பணத்தை சேமித்து வைத்திருப்பவர்களை குறி வைத்து பல்வேறு நிதி மோசடிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஒரு நபர் இந்த மோசடியில் சிக்கியுள்ளார்.

விசாகப்பட்டினத்தை சேர்ந்த 57 வயது நபர் பெரிய மருந்து நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தன்னுடைய மகனை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்ப வேண்டும் என்பதற்காக மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே பணி ஓய்வு பெற்று அதன் மூலம் தனக்கு வந்த தொகையை தனது அக்கவுண்டில் வைத்திருந்திருக்கிறார்.
மே 2ஆம் தேதி அவருடைய அக்கவுண்டில் ஓய்வூதிய தொகையானது வந்திருக்கிறது. மே 17ஆம் தேதி அவரது மகனுக்கு வெளிநாடு செல்வதற்கான விசா அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்திருக்கிறது. இந்த சூழலில் தான் அவருக்கு திடீரென ஒரு போன் கால் வந்துள்ளது.
அதில் ராஜ்புத் சைபர் கிரைம் காவல்துறையிலிருந்து பேசுவதாக ஒரு நபர் கூறியிருக்கிறார். அதில் உங்கள் பெயரில் பல்வேறு போதை மருந்து மற்றும் நிதி மோசடி வழக்குகள் உள்ளன. உங்களது ஆதார் எண் இவ்வாறு பல மோசடி வழக்குகளில் தொடர்பு படுத்தப்பட்டு இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
போன் மூலம் அந்த முதியவரை தொடர்பு கொண்டு, இந்த நபர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் பேசி உள்ளனர். பின்னர் மீண்டும் ஸ்கைப்பில் அவரை தொடர்பு கொண்டு , உங்களை பார்த்தால் எந்த தவறும் செய்யாதவர் போல தெரிகிறது, யாரோ இவரை வேண்டுமென்றே மாட்ட வைத்துள்ளனர் என கூறியுள்ளனர்.
பின்னர் நீங்கள் 85 லட்சம் ரூபாய் எங்களுக்கு கொடுங்கள் அது உங்களது ஓய்வூதிய தொகையில் வந்து இருந்து வந்ததுதான் என்பதை நாங்கள் ஆய்வு செய்து 15 நிமிடங்களில் உங்களது கணக்கிற்கு அனுப்பி விடுவோம் என கூறியுள்ளனர்.
இதனை நம்பிய அவர் 85 லட்சம் ரூபாய்க்கு காசோலை தயார் செய்து விசாகப்பட்டினத்தில் உள்ள எச்டிஎப்சி வங்கி கிளைக்கு சென்று அதனை அந்த போலி நபர்களிடம் வழங்கி உள்ளார், அவர்கள் கூறியபடி 15 நிமிடங்கள் கழித்து அந்த பணம் அவருக்கு வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த நபர் உடனடியாக விசாகப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காவல் துறையினரும் இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 85 லட்சம் டெல்லியை சேர்ந்த ரானா கார்மெண்ட்ஸ் என்று நிறுவனத்தின் பெயருக்கு மாற்றப்பட்டு அதிலிருந்து 105 வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே தன்னுடைய பணமும் கைவிட்டு போனது தன்னுடைய மகனும் தற்போது வெளிநாட்டுக்கு செல்ல முடியாத சூழலில் இருக்கிறார் என வருத்தத்துடன் தெரிவிக்கும் அந்த நபர் யாரேனும் தெரியாதவர்கள் உங்களை அழைத்தாலோ அல்லது வாட்ஸ் அப்பில் ஏதேனும் வீடியோ கால் வருகிறது அல்லது உங்கள் பெயரில் வழக்குகள் இருக்கின்றன என்பன போன்றவற்றை கூறி மிரட்டினாலோ பயப்படாதீர்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே விசாகப்பட்டினம் சைபர் காவல் துறையினர் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் இதுபோல 300 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்திருப்பதாக தங்களுக்கு புகார்கள் வந்துள்ளன என தெரிவிக்கின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications