பெங்களூரூ: இந்தியாவில் டிஜிட்டல் முறையில் நிதி மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் அவர்களை நம்பி ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
மோசடியாளர்கள் பல்வேறு புதிய யுத்திகளை கையாண்டு எளிதாக மக்களின் பணத்தை கையகப்படுத்துகின்றனர். அந்த வகையில் தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் அதனை அடிப்படையாக கொண்டு ஒரு மோசடி நடந்துள்ளது.

ஆன்லைனில் தீபாவளி பண்டிகைக்காக கிஃப்ட் கார்டு வழங்குவதாக கூறி ஒரு மெசேஜை அனுப்பி 4.5 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளது ஒரு கும்பல். பெங்களுருவை சேர்ந்த ஒருவர் இந்த மோசடி மெசேஜை நம்பி 4.5 லட்சம் ரூபாய் பணத்தை இழந்திருக்கிறார். மணி கண்ட்ரோல் தளம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் பெங்களூருவை சேர்ந்த ஒரு தொழில்நுட்ப வல்லுநர் புதிதாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
கடந்த 13ஆம் தேதி வாட்ஸ் அப்பில் தீபாவளி கிஃப்ட் என்ற பெயரில் ஒரு மெசேஜ் தகவல் வந்திருக்கிறது. அவருடைய நிறுவன மூத்த அதிகாரியிடம் இருந்து வருவதை போல அந்த தகவலை செட் செய்து அனுப்பியுள்ளனர். அதில் "நான் தான் உன்னுடைய பாஸ், தற்போது நான் கான்ஃபரன்ஸ் கால் மீட்டிங்கில் இருக்கிறேன்.
இந்தியாவில் மற்றும் வெளிநாட்டில் உள்ள நமது கிளையண்ட்களுக்கு சில கிஃப்ட் கார்டுகளை வழங்க வேண்டி இருக்கிறது. எனவே ஆப்பிள் ஆப் ஸ்டோர் கார்டுகளை பேடிஎம் மூலம் உன்னால் பெற முடியுமா என கேட்டாராம்.
தன்னுடைய மேலதிகாரி கேட்கிறார், நாமும் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கிறோம், இதனை செய்து கொடுத்தால் பாஸிடம் நமக்கு நல்ல பெயர் கிடைக்கும் என நம்பிய அந்த இளைஞர், அந்த மெசேஜில் இருந்த வழிமுறைகளை பின்பற்றி பேடிஎம்மில் கிஃப்ட் கார்டு வாங்கியுள்ளார்.
பேடிஎம் கணக்கினை பயன்படுத்தி 4.5 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு வவுச்சர்களை வாங்கியுள்ளார். இந்த வவுச்சர்களையும் அவற்றின் சீக்ரெட் கோடுகளையும் அந்த வாட்ஸ் அப் மெசேஜ் வாயிலாகவே ரிப்ளை ஆக வழங்கியிருக்கிறார்.
வவுச்சர்களை அனுப்பிய பிறகு அவருக்கு எந்த ஒரு மெசேஜும் வரவில்லை. அவரும் அதன் பிறகு தன்னுடைய மேலதிகாரியை தொடர்பு கொள்ளவில்லை. இந்நிலையில் அடுத்த நாள் அலுவலகம் சென்ற அந்த இளைஞர் மனித வளத்துறை அதிகாரிகளிடம் தன்னுடைய பாஸ் இவ்வாறு ஒரு மெசேஜ் அனுப்பியதாக கூறினார் அப்பொழுதுதான் அவர் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அவர் சைபர் கிரைம் காவல் துறையில் சென்று புகார் அளித்துள்ளார்.
தற்போது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் மோசடியாளர்களை தேடி வருகின்றனர். இது போன்ற சைபர் கிரைம்களில் வரும் முன் காப்பது மட்டுமே சிறந்தது என அறிவுறுத்துகின்றனர்.


Click it and Unblock the Notifications