இந்நாள்வரை அரசு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் கார்டு பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இனி அரசு நலத்திட்ட நிதியுதவி பெற ஆதார் எண் மட்டும் அடிப்படையாக இருக்காது என்றும்.. அதற்கு பதிலாக பயோமெட்ரிக் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் பயன்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மத்திய பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சரான ராஜீவ் ரஞ்சன் சிங், மக்கள் திட்ட பிரச்சாரம் 2027 குறித்து உரையாற்றினார். ஆதார் வழங்கும் மையங்கள் அதிகரித்துவிட்டன. யார் பெயரை சொன்னாலும் அடுத்த 5 நிமிடத்தில் ஆதார் கார்டு வழங்கிவிடுகின்றனர். எனவே இனி அரசு திட்ட உதவி பெற ஆதார் கார்டு அடிப்படையாக இருக்காது என்று தெரிவித்தார்.

மேலும் பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கு அவர்களுடைய பயோமெட்ரிக் விபரங்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால் எந்தெந்த திட்டங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படும் என்பது குறித்த விவரங்களை அமைச்சர் குறிப்பிடவில்லை.
இதுவரையில் மத்திய பஞ்சாயத்து ராஜ்-இன் கீழ் பயனாளிகளுக்கு நேரடியாக பணம் அனுப்பும் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. இருந்தாலும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள துறையின் கீழ் இயங்கும் சில திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக "நேஷனல் லைவ்ஸ்டாக் மிஷன் என்டர்பிரனர்ஷிப் டெவெலப்மென்ட் ப்ரோக்ராம்" என்ற திட்டத்தின் கீழ் பலன் பெறும் பயனாளிகள் ஆதார் நம்பரை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஆதார் சரிபார்ப்பு செய்து முடித்திருக்க வேண்டும். இது தவிர மத்திய அரசின் பல்வேறு முக்கிய நலத்திட்டங்களுக்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம், பிஎம் கிசான் திட்டம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டம், முதியோர், விதவை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் என பல திட்டங்களுக்கு இன்னும் ஆதார் கார்டு அடிப்படையில் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இனிவரும் காலங்களில் ஆதாரை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நிதி உதவி வழங்கப்படாமல் பயோமெட்ரிக் அடிப்படையில் வழங்கப்பட்டால் போலி ஆதாரத்தை பயன்படுத்தி பயன் பெறும் பயனாளர்களுக்கு முற்றுப்புள்ளியாய் அமையும். அதேபோல இந்த புதிய நடைமுறை உடனடியாக அனைத்து சேவைகளுக்கும் அமலுக்கு வருமா? அல்லது பகுதி பகுதியாக நடைமுறைப்படுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
