சென்னை: கடந்த 10 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாத ஆதார் கார்டுகள், ஜூன் 14ஆம் தேதி 2024க்குப் பிறகு செல்லாது என்று சமூக ஊடகங்களில் பல மெசேஜ்கள் வலம் வருகின்றன. இது தவறானவை என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெளிவுபடுத்தியுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஜூன் 14, 2024 வரை ஆதார் கார்டுகளை இலவசமாக புதுப்பிக்க முடியும் என்று கூறியுள்ளது. அதாவது உங்களுக்கு ஆதார் கார்டில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அவற்றை திருத்திக் கொள்ளலாம். அதற்கு எந்தவித கட்டணமும் நீங்கள் செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் ஜூன் 14ஆம் தேதிக்குப் பிறகு நீங்கள் ஆதார் கார்டில் ஏதேனும் திருத்தம் செய்தால், அதற்கு பணம் செலுத்த வேண்டும்.

ஆதார் கார்டுகளின் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கேடு இதற்கு முன் மார்ச் 14 வரை இருந்தது. அனைவருக்கும் இந்த காலக்கேடு போதுமானதாக இல்லை என்று கருதப்பட்ட பிறகு, இந்திய தனித்துவ அடையாள ஆணையம், இதனை ஜூன் 14 வரை நீட்டித்தது. ஒருவருடைய ஆதார் விவரங்கள், அவர்களுடைய பயோமெட்ரிக்ஸ் விவரங்களுடன் சரியாக இணைந்திருக்கும் போது, டூப்ளிகேட் ஆதார் கார்டு பெற்று மோசடி செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும். இதனால் ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் அனைத்தும் தவறாகப் பயன்படுத்தப்படாமல் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கையை UIDAI அமைப்பு எடுத்து வருகிறது.
ஆதார் விவரங்களை துல்லியமாக பராமரிப்பது ஏதேனும் அங்கீகார செயல்முறைகளின் போது பிழைகளை குறைக்கவும், போலி ஆதார் கார்டை கண்டறியவும் உதவுகிறது. எனவே 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டையை பெற்ற நபர்கள், தங்களின் அடையாள சான்று (POI) மற்றும் முகவரிச் சான்று (POA) ஆவணங்களை உடனடியாக புதுப்பிக்குமாறு UIDAI அறிவுறுத்துகிறது.
ஆன்லைனில் ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பது எப்படி?:
ஸ்டெப் 1: UIDAI-இன் uidai.gov.in/en/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: உங்கள் ஆதார் நம்பர் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் பெறப்பட்ட OTP-யை பயன்படுத்தி உள்நுழையவும்.
ஸ்டெப் 3: உள்நுழைந்ததும் ஏற்கனவே உள்ள அடையாளம் மற்றும் முகவரி விவரங்கள் சரியானதாக இருக்கிறதா என்பதை பார்க்கவும். திருத்த ஏதேனும் இருந்தால் குறிப்பிட்ட ஆவணத்தைத் (POI/POA) தேர்ந்தெடுத்து, JPEG, PNG அல்லது PDF வடிவத்தில் 2 MB க்கும் குறைவான அளவு கொண்ட ஸ்கேன் செய்யப்பட்ட காபியை பதிவேற்றவும்.
ஸ்டெப் 4: விவரங்களைச் சரி பார்த்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
ஆஃப்லைனில் ஆதார் விவரங்களை புதுப்பிப்பது எப்படி?: அதற்கு https://bhuvan-app3.nrsc.gov.in/aadhaar/ என்ற இணையதள முகவரிக்கு சென்று, உங்களுடைய பகுதியை என்டர் செய்து சர்ச் செய்யும்போது, அருகில் உள்ள ஆதார் பதிவு மையங்களின் விவரங்களை பெறலாம். அதன் பிறகு அங்கு சென்று, நீங்கள் உங்களுடைய ஆதார் கார்டில் தேவைப்படும் விவரங்களை மாற்றிக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications