ஆகாஷ் இன்ஸ்டிடியூட்-ஐ நடத்தி வரும் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைவரான ஜே.சி.சௌத்ரி NCR பகுதியில் ரூ.200 கோடி மதிப்புள்ள 4 சொத்துக்களை வாங்கியுள்ளார்.
ஆகாஷ் இன்ஸ்டிடியூட்-ஐ பைஜூஸ் நிறுவனம் 950 மில்லியன் டாலருக்கு கைப்பற்றிய பின்பு ஜே.சி.சௌத்ரி அதிகளவிலான பணத்தை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது ஓரே நேரத்தில் 4 சொத்துக்களை வாங்கிப் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார் ஜே.சி.சௌத்ரி.
4 சொத்துக்கள்
டெல்லியின் புகழ்பெற்ற கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள ஒரு பங்களாவை 51 கோடி ரூபாய்க்கும், குருகிராமில் உள்ள DLF The Camellias இல் சுமார் 150 கோடி ரூபாய்க்கு மூன்று சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முத்திரை தாள் கட்டணம்
கிரேட்டர் கைலாஷ் சொத்துக்கு மட்டும் ஜே.சி.சௌத்ரி முத்திரை தாள் கட்டணமாக மட்டும் சுமார் ரூ.3.06 கோடி செலுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குருகிராமில் உள்ள டிஎல்எஃப் சொத்து இன்னும் பதிவு செய்யப்படவில்லை, ஆனால் Fit-out பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
9000 சதுரடி பங்களா
கிரேட்டர் கைலாஷ் பங்களா இன்பினிட்டி பில்ட்வெல் என்னும் அமைப்பிடம் இருந்து வாங்கப்பட்டு உள்ளதாகவும், இந்த இடம் சுமார் 1,000 சதுர கெஜம் அதாவது 9000 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா தொற்று முடிந்த பின்பு இந்தியாவின் முன்னணி பணக்காரர்கள் பெரும்பாலானோர் ஆடம்பர வீட்டை வாங்கி வருகின்றனர்.
லென்ஸ்கார்ட் நிறுவனம்
ஆகாஷ் இன்ஸ்டிடியூட் ஜே.சி.சௌத்ரி போல் சில்லறை விற்பனையாளரான லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான நேஹா பன்சால் சமீபத்தில் இதே பகுதியில் 4000 சதுர அடி பங்களாவை ரூ. 22 கோடிக்கு வாங்கினார் என்று தகவல் வெளியானது. ஆனால் இதை நேஹா பன்சால் இன்னும் உறுதி செய்யவில்லை.
ஆகாஷ் இன்ஸ்டிடியூட்
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஆகாஷ் இன்ஸ்டிடியூட் இணை ப்ரோமோட்டர் மற்றும் நிர்வாக இயக்குனர் மற்றும் நிறுவனரான
ஆகாஷ் சவுத்ரி, டெல்லியில் 5 ஏக்கர் பண்ணை வீட்டை ரூ.137 கோடிக்கு வாங்கிய பிறகு, டெல்லியில் உள்ள கவுடில்யா மார்க் பகுதியில் 1,300 சதுர மீட்டர் பங்களாவை ரூ.137 கோடிக்கு வாங்கினார்.
டெல்லி
இதற்கு முன்னதாகத் தெற்கு டெல்லியின் வசந்த் விஹாரில் 2000 சதுர கெஜம் கொண்ட சொத்தை 100 கோடி ரூபாய்க்கு வாங்கினார். சௌத்ரி குடும்பத்தின் ரியல் எஸ்டேட் துறையில் பெரும் தொகையை முதலீடு செய்ய மிக முக்கியமான காரணம் 950 மில்லியன் டாலருக்கு ஆகாஷ் இன்ஸ்டிடியூட்-ஐ பைஜூஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டது தான்.
பைஜூஸ்
பைஜூஸ் உடனான $950 மில்லியன் ஒப்பந்தம் ஏப்ரல் 2021 இல் அறிவிக்கப்பட்டது. பைஜு ரவீந்திரன் தலைமையிலான ஆகாஷ் இன்ஸ்டிடியூட் நிறுவனம் வாங்கியதில் இருந்து 100% க்கும் அதிகமாக வளர்ந்துள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
1988 முதல் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்
ஜே.சி.சௌத்ரியால் 1988 ஆம் ஆண்டில் 12 மாணவர்களுடன் ஒரே சென்டர் மட்டுமே கொண்டு நிறுவப்பட்ட ஆகாஷ் இன்ஸ்டிடியூட். இந்தியாவில் இந்நிறுவனம் சுமார் 200 க்கும் மேற்பட்ட சென்டர்களை வைத்துக் கொண்டு சுமார் 250,000 க்கும் அதிகமான மாணவர்களுக்குக் கல்வி சேவை அளித்து வருகிறது.


Click it and Unblock the Notifications