இந்தியாவில் கடந்த சில வருடத்தில் விஜய் மல்லையா, நீரவ் மோடி எனப் பல பெரும் தலைகள் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த நிலையில், இக்கடனைத் திரும்ப வசூலிக்க வங்கிகள் முதல் அமலாக்கத் துறை முதல் போராடி வருகிறது.
இந்தப் பிரச்சனைகளை மூழ்கடிக்கும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி வழக்கை சிபிஐ ABG ஷிப்யார்டு மீது பதிவு செய்துள்ளது வங்கிகள் மத்தியிலும் மட்டும் அல்லாமல் மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ABG ஷிப்யார்டு
இந்தியாவின் முன்னணி தனியார் கப்பல் கட்டுமானம் மற்றும் பழுது நீக்கும் நிறுவனமாகத் திகழ்கிறது ABG ஷிப்யார்டு. இந்நிறுவனம் குஜராத், கோவாவில் கப்பல் கட்டுமான தளம் மற்றும் பழுது பார்க்கும் தளத்தை வைத்திருந்தாலும், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
28 வங்கிகளில் கடன்
ABG ஷிப்யார்டு நிறுவனம் 28 வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் சுமார் 22,842 கோடி ரூபாய் அளவிலான தொகையைக் கடனாகப் பெற்று மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தான் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி வழக்காக விளங்குகிறது.
சிபிஐ வழக்கு
ABG ஷிப்யார்டு நிறுவனத்தின் மீதான 22,842 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில் இந்நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனரான ரிஷி கமலேஷ் அகர்வால் மற்றும் இந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளான சந்தானம் முத்துசாமி, அஷ்வினி குமார், சுஷில் குமார் அகர்வால், ரவி விமல் நெவெடியா ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
13 இடத்தில் சோதனை
சிபிஐ அமைப்புச் சனிக்கிழமை சூரத், பருச், மும்பை, புனே ஆகிய பகுதிகளில் இருக்கும் இந்நிறுவன அதிகாரிகளுக்குச் சொந்தமான 13 இடத்தில் சோதனை நடத்தியுள்ளது. இந்தச் சோதனையில் இந்த வங்கி கடன் மோசடி தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவங்கியுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
எஸ்பிஐ வங்கி 2019 நவம்பர் மாதம் அளித்த புகாரின் பெயரில் இந்த விசாரணை துவங்கப்பட்டு தற்போது வங்கி கடன் மோசடி உறுதி செய்யப்பட்ட நிலையில் சிபிஐ 13 இடத்தில் செய்த சோதனையைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது எஸ்பிஐ வங்கி தலைமையில் 28 வங்கிகள் இணைந்து இந்நிறுவனத்திற்குக் கொடுத்த கடனை திரும்ப வசூலிக்கப் புதிய குழுவை உருவாக்கியுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி அதிக கடன்
ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் இந்த 22,842 கோடி ரூபாய் வங்கி கடன் மோசடியில் ஐசிஐசிஐ வங்கிக்கு ₹7,089 கோடியும், ஐடிபிஐ வங்கிக்கு ₹3,639 கோடியும், ஸ்டேட் வங்கிக்கு ₹2,925 கோடியும், பேங்க் ஆஃப் பரோடாவுக்கு ₹1,614 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ₹1,244 கோடியும் அளிக்க வேண்டும். இதன் மூலம் ஐசிஐசிஐ வங்கி தான் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொள்ளும் வங்கியாக உள்ளது.


Click it and Unblock the Notifications