இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான அலன் கேரீயர் இன்ஸ்டிடியூட், நாட்டின் முன்னணி எட்-டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான அன்அகடமியை கையகப்படுத்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் எட்டெக் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்த நிலையில், கொரோனாவுக்கு பின்பு தலைகீழாக மாறியது.
கடந்த 3 வருடத்தில் பல எட்டெக் நிறுவனங்கள் மோசமான நிலைக்கு சென்றுள்ளது மட்டும் அல்லாமல், பணிநீக்கம், நிறுவனத்தை மூடுதல், முடக்குதல் என பல பிரச்சனைகளை எதிர்கொண்டது. இந்த நிலையில் தான் அலன் கேரீயர் இன்ஸ்டிடியூட் நிறுவனம் அன்அகடமி-ஐ வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் அன்அகடமி சுமார் 800 மில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது, இந்த நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் 3.4 பில்லியன் டாலராக மதிப்பிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் பல மாதங்களாக நடைபெற்று வரும் வேளையில் அலன் கேரீயர் இன்ஸ்டிடியூட்டின் உரிமையாளரான மஹேஸ்வரி குடும்பத்தின் ஒப்புதலைப் பொறுத்து தான் அனைத்தும் உறுதி செய்யப்படும்.
இந்த டீல் வெற்றிகரமாக முடிந்தால் இந்தியாவில் வளர்ந்து வரும் எட்-டெக் துறையில் மிகப்பெரிய இணைப்புகளில் ஒன்றாக இருக்கும். 800 மில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டு உள்ள அன்அகடமியிடம் தற்போது 160 மில்லியன் டாலர் ரொக்க இருப்பு உள்ளது.
இந்த இணைப்பிற்குப் பிறகு, கவுரவ் முஞ்சால், ரோமன் சைனி மற்றும் சுமித் ஜெயின் உள்ளிட்ட அன்அகடமியின் நிறுவனர் குழு தங்கள் பதவிகளில் இருந்து விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பைஜூஸ் வீழ்ச்சி: ஒரு காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய எட்-டெக் நிறுவனமாக திகழ்ந்த பைஜூஸ் நிறுவனம் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டு இந்நிறுவனம் 22 பில்லியன் டாலர்களுக்கு மதிப்பிடப்பட்ட நிலையில், தற்போது அதன் மதிப்பு கிட்டத்தட்ட ஜீரோவாக குறைந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பைஜூஸ் நிறுவனம் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வந்தாலும், கடந்த ஒரு வருடமாக நிறுவனம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. அதிகரித்து வரும் போட்டி, ஊழியர்களின் பணிநீக்கம், நிதி நெருக்கடி போன்றவை நிறுவனத்தின் வளர்ச்சியை பாதித்துள்ளன.
இந்நிலையில், பைஜூஸ் நிறுவனத்தின் நிறுவனர் பைஜூ ரவீந்திரன் தனது நிறுவனம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து முதல் முறையாக சமீபத்தில் பேசியுள்ளார். அவர் தனது நிறுவனத்தின் அடிப்படை வணிகம் தற்போது பூஜ்ஜியமாக குறைந்துள்ளதாக ஒப்புக்கொண்டார். இது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அவர் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பைஜூஸ் நிறுவனத்தின் முக்கிய வருவாய் ஆதாரமாக இருந்த கல்வி பயன்பாடுகளின் விற்பனை குறைந்துள்ளது. இருப்பினும், நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் தொடர்ந்து வருவாய் ஈட்டி வருவதாக பைஜூ ரவீந்திரன் தெரிவித்துள்ளார். இந்த துணை நிறுவனங்கள் மூலம் நிறுவனம் ஆண்டுக்கு 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாயை ஈட்டி வருவதாக அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications