அட்சய திருதியை பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நகை விற்பனை நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை விற்பதற்காக தள்ளுபடிகளை வாரி வழங்கத் தொடங்கி இருக்கின்றன. இந்தியாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது 19ஆம் தேதி அன்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வ வளம் பெருகும் என்ற நம்பிக்கை இருப்பதால் ஏராளமான மக்கள் தங்களால் இயன்ற அளவு ஒரு கிராம் தங்க நாணயமாவது வாங்கிவிட வேண்டும் என கடைகளுக்கு படையெடுப்பார்கள். இந்த ஆண்டு தங்கம் விலை தன்னுடைய வரலாற்று உச்சத்திலிருந்து பெருமளவு சரிவடைந்து இருக்கிறது. எனவே இந்த விலை குறைவு வாய்ப்பை பயன்படுத்தி தங்கத்தை வாங்கி விட வேண்டும் என ஏராளமானவர்கள் இந்த ஆண்டு கடைகளுக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

இத்தகைய சூழலில் தான் நகை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களும் ஏராளமான தள்ளுபடிகளை வாரி வழங்கி வாடிக்கையாளர்களை தங்களுடைய கடைகளை நோக்கி வர வைப்பதற்காக ஆயத்தமாகி வருகின்றன. இந்த ஆண்டு அட்சய திருதியை ஞாயிற்றுக்கிழமை வருவதால் வழக்கத்தைவிட வாடிக்கையாளர் வருகை அதிகமாக இருக்கும் என நகை விற்பனை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
பொதுவாக இந்த நாளில் மக்கள் தங்கம் தான் வாங்குவார்கள் ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வைர நகைகளை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதாக டிவைன் சாலிடார் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மேத்தா தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர் மத்தியில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வருவதாக கூறுகிறார்.

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க வேண்டும் ஆனால் அந்த தங்கம் தங்களுக்கு ஒரு முதலீடாகவும் இருக்க வேண்டும் என ஏராளமானவர்கள் எண்ணுவதாக அவர் குறிப்பிடுகிறார். தங்கம் விலை கடந்த ஜனவரி மாதத்தில் தன்னுடைய வரலாற்று உச்சத்தை எட்டியது. அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,34,000 ரூபாய் என்ற அளவை எட்டியது. தற்போது 1,12,000 ரூபாய் என்ற அளவில் நீடிக்கிறது.
வரலாற்று உச்சத்தில் இருந்து விலை குறைந்திருப்பதால் இந்த ஆண்டு அட்சய திருதியைக்கு நல்ல விற்பனை இருக்கும் என்று பார்ப்பதாக சென்கோ கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்காக நகை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் கூட இந்த அட்சய திருதியை பயன்படுத்தி நகை வாங்குகின்றனர் என்கிறார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 15 லிருந்து 20% வரை விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறியிருக்கிறார். இந்த ஆண்டு 22 கேரட் நகைகளை விட 18 கேரட் நகைகள் மற்றும் குறைந்த எடை கொண்ட அதே வேளையில் அன்றாடம் அணியக்கூடிய நகைகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் டிமாண்ட் அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கிறார்.
இதற்கிடையே மலபார் கோல்டு நிறுவனம் தங்களுடைய தங்கம் மற்றும் அன்கட், ஜெம்ஸ்டோன்ஸ் நகைகளுக்கு செய்கூலியில் 30 சதவீத தள்ளுபடி அறிவித்திருக்கிறது. அதே போல ஆதித்யா பிர்லா ஜூவல்லரி நிறுவனத்தை பொருத்தவரை செய்கூலி மற்றும் சேதாரத்தில் 35 சதவீத தள்ளுபடி அறிவித்திருக்கிறது. முன்கூட்டியே 25 சதவீத பணத்தை அட்வான்ஸ் செலுத்தி தங்கத்தை பதிவு செய்யும்போது அவர்களுக்கு குறிப்பிட்ட சலுகைகளை வழங்குவதாகவும் அறிவித்திருக்கிறது.
பல்வேறு நகை விற்பனை நிறுவனங்களும் தங்கத்தில் செய்கூலி சேதாரத்தில் தள்ளுபடி, தங்கத்துக்கு நிகரான வெள்ளி இலவசம் என தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. இதற்கிடையே இன்ஸ்டாமார்ட் நிறுவனம் கல்யான் ஜூவல்லர்ஸ் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி மக்கள் அன்றைய நாளில் கடைகளுக்கு கூட செல்ல வேண்டாம். இன்ஸ்டாமார்ட்டில் கல்யாண் ஜுவல்லர்ஸ் தங்க நாணயங்களை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications