இந்தியா தனக்கு தேவையான தங்கத்தின் பெரும்பகுதியை வெளிநாடுகளில் இருந்து தான் வாங்குகிறது. இதனால் தான் சர்வதேச காரணிகள் இந்தியாவில் தங்கம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. உலக அளவில் ஏற்படும் வர்த்தக மோதல், வட்டி விகித மாற்றங்கள் அனைத்துமே உலக தங்க சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, அது இந்திய சந்தையிலும் நாம் விலை கொடுத்து வாங்கும் தங்க நகைகளில் விலையும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்தியாவே ஒரு காலத்தில் தங்கத்தை உற்பத்தி செய்த நாடு தான். கர்நாடகா மாநிலம் கேஜிஎஃப் கோலார் தங்க சுரங்கம் மூலம் நாம் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இணையாக தங்கம், உற்பத்தி செய்தோம். ஆனால் 1990களுக்கு பின் அரசு இரும்பு, காப்பர் போன்ற பிற பொருட்களை தோண்டி எடுப்பதில் அதிக கவனம் செலுத்தியது. இதனால் தங்க சுரங்கங்கள் கண்டறியும் பணியும் நிறுத்தப்பட்டது. கோலார் தங்க சுரங்கமும் மூடப்பட்டுவிட்டது. இதனால் நாம் பெருமளவில் தங்கத்திற்கு இறக்குமதியை சார்ந்த நாடாக மாறிவிட்டோம்.

தற்போது மத்திய, மாநில அரசுகள் நாட்டின் எந்தெந்த பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருக்கிறது, அவற்றை தோண்டி எடுக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு நடத்த பல நிறுவனங்களுக்கும் ஒப்பந்தம் தந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக தங்கம் தோண்டி எடுக்கும் உரிமையை தனியார் துறைக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் மிகப்பெரிய தங்க சுரங்கம் அமைக்கப்பட உள்ளது.
ஆந்திர மாநிலத்தின் ஜொன்னகிரி பகுதியில் பூமிக்கு அடியில் பெரிய அளவில் தங்கம் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இங்கே தங்கத்தை பிரித்து எடுப்பதற்கான பணிகள் தனியார் நிறுவனத்திடம் குத்தகை முறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் தான் இவ்வாறு தங்கத்தை தோண்டி எடுத்து உலோகமாக மாற்றி வழங்கும்,ஆனால் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு தனியார் நிறுவனத்திற்கு இது வழங்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் Geomysore Services என்ற தனியார் நிறுவனம் ஜொன்னகிரியில் தங்கத்தை எடுத்து தங்கள் பிராண்ட் பெயரிலேயே விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஹட்டி கோல்டு மைன்ஸ் நிறுவனத்திற்கு அடுத்து இந்தியாவில் செயல்பாட்டுக்கு வரும் இரண்டாவது தங்க சுரங்கம் இது. இந்த சுரங்கம் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.
Geomysore Services நிறுவனம் இந்த பகுதியில் தங்கத்தை பூமிக்கு அடியில் இருந்து பிரித்து எடுத்து உலோகமாக மாற்றி நேரடியாக தங்களுடைய பெயரிலேயே உள்நாட்டு நகை விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு இருக்கிறது. எனவே உள்நாட்டிலேயே தங்கம் எடுக்கப்பட்டு நகை தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதனால் இறக்குமதி செய்வதை விட குறைந்த விலையில் நிறுவனங்களுக்கு தங்கம் கிடைக்கும். எனவே தங்கத்தின் விலை குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அடுத்த மாதமே இந்த சுரங்கம் செயல்பாட்டுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சுரங்கத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் பங்கேற்க உள்ளார் என சொல்லப்படுகிறது. முதல்கட்டமாக 600 கிலோகிராம் தங்கம் பிரித்தெடுக்க முடிவு எடுத்திருப்பதாக நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.
பின்னர் படிப்படியாக அடுத்த 15 ஆண்டுகளில் இங்கே இருந்து ஆண்டுக்கு 1000 கிலோ ரீபைண்டு கோல்டு எடுக்க முடிவு செய்துள்ளதாக இந்த நிறுவனம் கூறுகிறது. இது நடந்து விட்டால் ஜொன்னகிரி மற்றும் ஆந்திராவின் பொருளாதாரமே மாறும். இந்த பகுதியே வளர்ச்சி பெறும், மேலும் பல நிறுவனங்கள் உள்நாட்டில் தங்க சுரங்கம் அமைக்க ஊக்குவிக்கும்.


Click it and Unblock the Notifications

