அண்ணன் அகில உலகத்தையும் தன் வியாபாரத்தால் வளைத்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் தம்பியோ தன்னை காப்பாற்றிக் கொள்ளக் கூட போராடிக் கொண்டு இருக்கிறார் என்று சொன்னால் மிகை இல்லை.
இப்போது கூட தம்பி அனில் அம்பானி, யெஸ் பேங்கிடம் வாங்கிய கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தவில்லை எனச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
அப்படி என்ன கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. யெஸ் பேங்குக்கு அனில் அம்பானியிடம் இருந்து எவ்வளவு ரூபாய் பணம் வர வேண்டும் என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம்.
அனில் அம்பானி கம்பெனி
அண்ணன் தம்பி இரண்டு பேரும் சண்டை போட்டு பிரிந்த போது, அனில் அம்பானி, தன் குழும நிறுவனங்களுக்கு அனில் திருபாய் அம்பானி குழுமம் (ADAG - Anil Dhirubai ambani Group) என்று பெயர் வைத்தார். அனில் அம்பானி, ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என பல நிறுவனங்களை நடத்தினார், நடத்திக் கொண்டு இருக்கிறார்.
ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்
இந்த ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்கிற அனில் அம்பானியின் நிறுவனம் தான், சமீபத்தில் யெஸ் பேங்கிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வில்லை. யெஸ் பேங்க் உடன், அரசு நிர்வாகத்தின் கீழ் இருக்கும் ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கியிடம் வாங்கிய கடனைக் கூட திருப்பிச் செலுத்தவில்லை.
எவ்வளவு தொகை
ரிலையன்ஸ் இன்ஃப்ரா என்கிற நிறுவனம், யெஸ் பேங்கிடம் வாங்கிய 20.15 கோடி ரூபாய் அசல் தொகையையும், 30.12 கோடி ரூபாய் வட்டித் தொகையையும் செலுத்தவில்லை. வங்கியிடம் வாங்கிய கடனுக்கான அசலை ஜனவரி 23, 2020 அன்று செலுத்த வேண்டும். ஆனால் செலுத்தவில்லை.
பி எஸ் இ
அதே போல வாங்கிய கடனுக்கான அசல் தொகையை பிப்ரவரி 01, 2020-க்குள் செலுத்தி இருக்க வேண்டும். அதுவும் செலுத்தவில்லையாம். இந்த விவரங்களை ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கம்பெனி கடந்த மார்ச் 03, 2020, செவ்வாய்க் கிழமை அன்று மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்து இருக்கிறதாம்.
மொத்தக் கடன்
கடந்த ஜனவரி 31, 2020 கணக்குப் படி, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் மொத்த வங்கிக் கடன் 3,872 கோடி ரூபாயாம். ஆனால் இந்த நிறுவனம் செலுத்த வேண்டிய மொத்த தொகை (வட்டி எல்லாம் சேர்த்து) 6,178 கோடி ரூபாயாம். இப்படி கோடி கணக்கில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால் யெஸ் பேங்க் எல்லாம் எப்படி செயல்படும்.


Click it and Unblock the Notifications