டெல்லி: பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் வெற்றிகரமான தொழிலதிபர்களில் ஒருவராகவும், இந்தியாவின் மெகா கோடீஸ்வரர்களில் ஒருவராகவும் இருந்தவர் அனில் அம்பானி. ஆனால் இன்று அவரது நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும், இந்தியாவின் மெகா கோடீஸ்வரான முகேஷ் அம்பானியின் தம்பி தான் அனில் அம்பானி. அம்பானி சகோதரர்கள் அவர்களது அப்பா திருபாய் அம்பானி உயிரோடு இருக்கும் வரை ஒன்றாகத்தான் நிறுவனத்தை நடத்தி வந்தனர். 2002ல் திருபாய் அம்பானி மறைந்ததையடுத்து, அம்பானி சகோதரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதனையடுத்து திருபாய் அம்பானி மனைவி கோகிலா பென் அம்பானி இருவரையும் அழைத்து பேசினார். இதனையடுத்து 1,500 கோடி டாலர் மதிப்பிலான ரிலையன்ஸ் வர்த்தகம் அம்பானி சகோதரர்களுக்கு சமமாக பிரிக்கப்பட்டது. அனில் அம்பானி வர்த்தகத்தில் அதிவேக வளர்ச்சி கண்டார். 2008ல் 4,200 கோடி டாலர் சொத்து மதிப்புடன் அனில் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 6வது இடத்தில் இருந்தார். தனது அண்ணன் முகேஷ் அம்பானியை காட்டிலும் அதிக சொத்து மதிப்பை கொண்டு இருந்தார். மேலும் ஆடம்பரமான வாழ்க்கையை மேற்கொண்டார்.
காலம் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என்பதை அனில் அம்பானி மறந்து விட்டார். அனில் அம்பானியின் அசுர வளர்ச்சியே அவரது வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது. அனில் அம்பானி செய்த முதலீடுகள் எதிர்மறையாக அமைந்தது. தென்னாப்பிரிக்க நிறுவனமான எம்.டி.என்.வுடனான ஒரு வர்த்தகத்தில் அனில் அம்பானி 200 கோடி டாலர் முதலீடு செய்தார். இதனால் இறுதியில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடனில் விழுந்தது. அனில் அம்பானியின் நிதி முறைகேடுகள், சீன வங்கிகளில் கடன் வாங்கியது மற்றும் முகேஷ் அம்பானியின் ஜியோ வருகை ஆகியவை அனில் அம்பானியின் தொலைத்தொடர்பு வர்த்தகத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

பத்தே ஆண்டுகளில் அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 4200 கோடி டாலரில் இருந்து 170 கோடி டாலராக சரிந்தது. வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் 2020ல் அனில் அம்பானி நிறுவனம் திவாலாகி விட்டதாக அறிவித்தார். மேலும் சட்ட கட்டணங்களை செலுத்துவதற்காக தனது குடும்பத்தின் நகைகளை விற்பனை செய்தேன் என்று தெரிவித்தார். இன்று அனில் அம்பானி தலைமையிலான நிறுவனங்கள் மொத்தமாக ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் கடனை கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications