புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் ஆகியவை காரணமாக அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருகின்றனர். இவ்வாறு பனி பாறைகள் உருகுவது புவியின் சுற்றுசூழல் அமைப்புக்கு ஆபத்தானது என தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இவ்வாறு பனி பாறைகள் உருகி வருவது ஒரு மிக முக்கியமான வாய்ப்பினை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தி தந்திருக்கிறது.
தற்போது உலகம் முழுவதுமே தங்கம், வெள்ளிக்கான போட்டி அதிகமாக உள்ளது. யார் வசம் அதிக தங்கம் உள்ளதோ அவர்கள் கை தான் ஓங்கி இருக்கிறது. அண்டார்டிகா இதனை மாற்றி அமைக்கும் என சொல்லப்படுகிறது. தி நேச்சர் ஜர்னல் என்ற இதழலில் வெளியிடப்பட்டுள்ள ஒரு புதிய ஆய்வு அறிக்கை நீண்ட காலமாக பனியால் மூடப்பட்டிருந்த பரந்த நிலப்பரப்புகளில் தங்கம், வெள்ளி மற்றும் பிற மதிப்பு மிக்க கனிமங்கள் புதைந்து இருப்பதாக கூறியுள்ளது.

2300 ஆம் ஆண்டுக்குள் அண்டார்டிகாவின் பெரும் பகுதி பனிகள் உருகி வெற்று நிலமாக உருவாகும் என கண்டறிந்துள்ளனர். இங்கே தங்கம் வெள்ளி போன்ற உலோகங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கணித்துள்ளனர். அண்டார்டிகாவில் கனிம வளங்கள் குறித்த கோட்பாடுகள் நீண்ட காலமாகவே முன்வைக்கப்படுகின்றன. அதன் அடர்த்தியான பனி படலத்தின் கீழ் பல அரிய வகை கனிமங்கள் உள்ளன, ஆனால் அங்கே கடுமையான பனி இருப்பதால் ஆய்வு செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் கனிம வளம் குறித்த ஆய்வுகளை தீவிர படுத்த முடியவில்லை.
அண்டார்டிகாவின் பல்வேறு இடங்களிலும் தங்கம், வெள்ளி , தாமிரம் ,இரும்பு, பிளாட்டினம் மற்றும் கோபால்ட் ஆகியவை இருப்பதாக ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் கண்டத்துடன் அண்டார்டிகா இணைந்து இருந்ததாகவும் அந்த பகுதி அதிக கனிம வளத்தோடு இருந்ததாகவும் கூறும் விஞ்ஞானிகள் மனிதர்கள் இங்கே பெரிய புதையல் கிடைக்க போகிறது என்கின்றனர்.

அண்டார்டிகாவில் நிச்சயமாக எண்ணில் அடங்காத கனிம வளம் இருக்கும் என விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர். தற்போது தங்கம் ,வெள்ளி போன்றவை அதிக டிமாண்ட் கொண்டிருப்பதால் இங்கே அவற்றை தோண்டி எடுக்கும் வாய்ப்பு கிடைக்க போவதாக தெரிவிக்கின்றனர். இதற்கிடையே கனிம வளம் நிறைந்ததாக சந்தேகப்படக்கூடிய நிலப்பரப்புகள் தங்களுக்கு உரியவை என அர்ஜென்டினா, சிலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன. அதேபோல ஆஸ்திரேலியா ,நியூசிலாந்து, நார்வே, பிரான்ஸ் போன்ற நாடுகளும் இந்த பகுதியில் தங்களுக்கு சொந்தமான இடங்கள் இருப்பதாக கூறுகின்றன.
எனவே இங்கு தங்கம், வெள்ளி கிடைப்பது இந்த நாடுகளுக்கு பெரிய சாதகமாக அமையும். தற்போது அண்டார்டிகாவில் கனிம வளங்களை தோண்டி எடுப்பது என்பது தடை செய்யப்பட்டதாக இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறையின் ஒரு பகுதியாக எந்த ஒரு கனிம ஆய்வும் நடத்தப்படவில்லை. விரைவில் இங்கே பனி பாறைகள் உருகி நிலப்பகுதியாக மாறும் போது விதிமுறை மாற்றப்படலாம் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications

