இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சமீபத்தில் பிஸ்லேரி நிறுவனத்தின் வாட்டர் பாட்டில் பாதுகாப்பற்றது என அறிவித்து அந்நிறுவனத்தின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்தது. இந்நிலையில் தங்களுடைய தயாரிப்புகள் அனைத்தும் நுகர்வோருக்கு பாதுகாப்பானவை தான் என்று பிஸ்லேரி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் ஆணித்தரமாக தெரிவித்துள்ளது.
இது குறித்து பிஸ்லேரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குடிநீர் பாதுகாப்பு தான் எங்களுடைய முதன்மையான நோக்கம். எங்களுடைய உற்பத்தி செயல்முறையில் 90-க்கும் மேற்பட்ட தரப் பரிசோதனைகளை செய்து வருகிறோம். இந்தப் பிரச்சனைக்கு தீர்வுக்காண FSSAI அமைப்புடன் தொடர்ந்து ஒத்துழைப்போம். பல ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையை பெற்ற பிஸ்லேரி எப்போதும் பயன்பாட்டுக்கு பாதுகாப்பானது", என்று தெரிவித்துள்ளது.

ஏன் இந்த விளக்கம்?: கடந்த 2025-ஆம் ஆண்டின் செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று பிஸ்லேரி நிறுவனத்தின் கோவா தொழிற்சாலையிலிருந்து 6 பிஸ்லேரி வாட்டர் பாட்டில்களை FSSAI சேகரித்தது. அதில் 5 பாட்டில்கள் FSSAI-யின் தர நிர்ணயங்களைப் பூர்த்தி செய்தது. ஆனால் 6-வது பாட்டிலில் புரோமேட் அளவு லிட்டருக்கு 10 மைக்ரோகிராமுக்கு பதிலாக 12 மைக்ரோகிராம்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து 2025-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி அன்று FSSAI எடுத்த நடவடிக்கைக்கு பிஸ்லேரி மேல்முறையீடு செய்தது. அதன் பின்னர் மீண்டும் ஆய்வக சோதனை நடத்தப்பட்டு அதில் புரோமேட் அளவு வரம்பிற்குள் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அதில் பாலிநியுக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோ கார்பன்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது.
இந்த இரண்டு சோதனைகளிலும் வெவ்வேறு முடிவுகள் வந்துள்ளதால் இந்த வேறுபாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று பிஸ்லேரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து FSSAI அங்கீகாரம் பெற்ற மற்றொரு ஆய்வகத்தில் அதே பாட்டிலை பிஸ்லேரி பரிசோதித்தபோது புரோமேட் அளவு வரம்பிற்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் 2026-ஆம் ஆண்டின் பிப்ரவரி 2-ஆம் தேதி பிஸ்லேரி நிறுவனம் FSSAI-யின் மேற்கு மண்டல அலுவலகத்தில் ஆய்வக முடிவுகளை சமர்ப்பித்தது. அதன் பிறகு FSSAI தரப்பிலிருந்து எந்த தகவலும் தங்களுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து பிஸ்லேரி, "இன்று வரையில் எங்களுக்கு ஈமெயிலோ அல்லது நேரடியாகவோ எந்த நோட்டீசும் வரவில்லை. அதேபோல இணையதளத்திலும் அத்தகைய எந்த ஒரு அறிவிப்பையும் எங்களால் காண முடியவில்லை" என்று தெரிவித்துள்ளது.
திடீரென பிஸ்லேரி விளக்கம் அளிக்கக் காரணம் என்ன?: பிஸ்லேரி நிறுவனத்தின் வாட்டர் பாட்டில் மீது வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளதாக FSSAI சமூக வலைதளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதை தொடர்ந்தே பிஸ்லேரி இந்த விளக்கத்தை அளித்துள்ளது. அந்தப் பதிவில் பிஸ்லேரி வளாகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட பேக்கேஜ் செய்யப்பட்ட வாட்டர் பாட்டிலில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட புரோமேட் அதிகமாக இருந்ததால் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006-இன் கீழ் அது பாதுகாப்பு பெற்றது என அறிவிக்கப்பட்டதாக FSSAI தெரிவித்துள்ளது.
பிஸ்லேரியின் மேல்முறையீட்டிற்கு பிறகு பரிந்துரைக்கப்பட்ட ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட போது அதில் பாலிநியுக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோ கார்பன் எனும் வேதிப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டதால் அது பாதுகாப்பது என்பது உறுதி செய்யப்பட்டதாகவும்.. சட்ட விதிமீறல்கள் நிரூபிக்கப்பட்டதால் வழக்கு தொடர அனுமதி அளிக்கப்பட்டதாகவும் FSSAI விளக்கம் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications
