அடல் பென்ஷன் யோஜனா என்னும் ஓய்வூதியத் திட்டத்தை இந்திய அரசு வழங்கி வருகிறது. விருப்பத்தின் பேரில் ஓய்வூதியத் திட்டங்களில் சேர விரும்பும் நபர்களுக்காகவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அமைப்பு சாரா துறையில் பணிபுரிபவர்கள், ஓய்வுக்கு பிறகு செலவுக்கு வருமானம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இத்திட்டத்தில் தாராளமாக முதலீடு செய்யலாம். இந்திய குடிமக்கள் அனைவரும் தாங்கள் பணிபுரியும் காலத்தில் இருந்து பங்களிப்பு செய்து 60 வயதைக் கடந்த பிறகு மாதம் தோறும் ஓய்வூதியம் பெறலாம்.
இதற்கு அரசு வேலைகளில் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் விருப்பத்தின் பேரில் பங்களிப்பு செய்து 60 வயதைக் கடந்த பிறகு மாதா மாதம் பென்ஷன் பெற முடியும். ஓய்வூதியத் தொகையை பொருத்தவரையில் 1,000 ரூபாய், 2,000 ரூபாய், 3000 ரூபாய், 4000 ரூபாய் மற்றும் 5000 ரூபாய் என ஒருவர் செய்யும் பங்களிப்பை பொறுத்து பென்ஷன் வழங்கப்படும்.
பென்ஷன் தொகை ஒருவர் இத்திட்டத்தில் சேரும் வயது மற்றும் அவர் செய்யும் பங்களிப்பு தொகையைப் பொறுத்து மாறுபடும். இந்த திட்டத்தின் கீழ் மாதம் ரூ.5000 என்ற அதிகபட்ச பென்ஷன் பெற 30 வயதைக் கடந்த நபர் எவ்வளவு பங்களிப்பு செய்ய வேண்டும்? என்பதைப் பார்ப்போம்.

கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையைப் பாருங்கள். அதில் வயதைப் பொறுத்து எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு பென்ஷன் கிடைக்கும் என்ற விபரங்கள் தெளிவாக தெரியும். 1,000 ரூபாய் பென்ஷன் பெற 30 வயதைக் கடந்த நபர் மாதத்திற்கு 116 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். ரூ. 2000 பென்ஷன் பெற விரும்பினால் ரூ. 231 முதலீடு செய்ய வேண்டும். ரூ.3000 பென்ஷன் பெற 347 ரூபாயும், ரூ.4000 பென்ஷன் பெற 462 ரூபாயும், 5000 பென்ஷன் பெற 577 ரூபாயும் பங்களிப்பு செய்ய வேண்டும். இது மாதாந்திர பங்களிப்பு மட்டுமே.
மாதத்திற்கு ரூ.1,000 பென்ஷன் பெற 30 வயதில் மாதத்திற்கு ரூ.116 முதலீடு செய்தால் அதிலிருந்து 30 ஆண்டுகளில்.. அதாவது 60-வது வயது வரை மொத்தமாக ரூ.1.7 லட்சத்தை முதலீடு செய்திருப்பீர்கள். இந்த தொகையை 60 வயதை கடந்த பிறகு பிரித்துப் பிரித்து பென்ஷனாக வழங்குவார்கள். அதுவே நீங்கள் 30 வயதில் மாதத்திற்கு 231 முதலீடு செய்தால் அடுத்த 30 ஆண்டுகளுக்குள் நீங்கள் ரூ.3.4 லட்சத்தை முதலீடு செய்திருப்பீர்கள். இது 2000 பென்ஷன் பெறுவதற்கு செய்யப்படும் முதலீடு. இந்த தொகையையும் நீங்கள் அட்டவணையில் தெள்ளத் தெளிவாக பார்க்கலாம்.
30 வயதுடைய நபர் ரூ.5,000 என்ற அதிகபட்ச பென்ஷன் பெற மாதம் ரூ.577 முதலீடு செய்ய வேண்டும். இப்படி செய்தால் அடுத்த 30 ஆண்டுகளில் அவர் ரூ.8.5 லட்சத்தை முதலீடு செய்திருப்பார். இந்தத் தொகையை ரூ.5000 ஆகப் பிரித்து மாதம் தோறும் பென்ஷனாக வழங்குவார்கள்.
நீங்கள் காலாண்டுக்கு ஒரு முறை அரையாண்டுக்கு ஒரு முறை என எப்படி வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அதே போல 18 வயதுடைய நபர் குறைந்தபட்சமாக மாதத்திற்கு 42 ரூபாய் முதலீடு செய்தாலே 60 வயதை கடந்த பிறகு மாதம் தோறும் 1,000 ரூபாய் பென்ஷன் பெற முடியும்.
நீங்கள் செய்யும் வயதை பொறுத்து அடுத்து எத்தனை ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் எளிதில் தெரிந்து கொள்ளலாம். உங்கள் வயதிலிருந்து 60 வயது வரை முதலீடு செய்ய முடியும். அதுதான் லிமிட். 60 வயதைக் கடந்தவுடன் நீங்கள் செய்யும் பங்களிப்பை பொறுத்து பென்ஷன் கிடைக்கும். குறைந்தபட்ச முதலீட்டில் பென்ஷன் பெற விரும்பும் நபர்களுக்கு உண்மையிலேயே இத்திட்டம் ஏற்றது என்றே சொல்லலாம்.


Click it and Unblock the Notifications
