திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி அடிப்படையில் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். அங்கு வரும் பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல் நிறைவேறும் பட்சத்தில் பணம், தங்கம், வெள்ளி மற்றும் வைர ஆபரணங்களை காணிக்கையாக செலுத்தும் நடைமுறையும் இந்நாள் வரை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெயர் சொல்ல விரும்பாத ஒரு பக்தர் ஏழுமலையானுக்கு சுமார் 121 கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்கவுள்ளார்.
வருகின்ற நவம்பர் 26-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று இந்த பிரம்மாண்ட காணிக்கையை அவர் செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த பக்தர் வழங்கவுள்ள காணிக்கையின் மொத்த மதிப்பு 150 முதல் 160 கோடி ரூபாய் இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வளவு காணிக்கையை செலுத்தும் பக்தர் யார்?: கோயில் வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ரூ.160 கோடி மதிப்பிலான காணிக்கையை செலுத்தும் அந்த பக்தர் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவருடைய பெயர் மற்றும் தனிப்பட்ட விவரங்களை யாரும் வெளியிடவில்லை.
காணிக்கையை வழங்குவதற்கு முன்னதாக அந்த பக்தர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் ஆலோசனையும் நடத்தியுள்ளார். தேவஸ்தான அதிகாரிகளின் கூற்றுப்படி தனி நபர் வழங்கும் அதிகபட்ச தங்கக் காணிக்கை இதுவாகும்.
மேலும் 43 வகையான தங்க ஆபரணங்களை வழங்க அந்த பக்தர் திட்டமிட்டுள்ளார். இதற்காக சுமார் 5 மாதத்திற்கு முன்னரே திருப்பதி தேவஸ்தானத்தின் கருவூலத்திற்கு நேரில் சென்று ஏழுமலையானுக்கு அணிவிப்பதற்கு தேவைப்படும் தங்க ஆபரணங்கள் குறித்த விபரங்களையும் கேட்டறிந்துள்ளார். தேவஸ்தான அதிகாரிகள் சொன்ன விவரங்களின் அடிப்படையில் தான் ஏழுமலையானுக்கு தேவைப்படும் ஆபரணங்களை ஆர்டர் செய்துள்ளார். அவற்றில் தங்க கிரீடம், பல அடுக்குகள் கொண்ட தங்க நெக்லஸ் மற்றும் இதர சிறப்பு ஆபரணங்களும் அடங்கும்.
இந்த நவம்பர் 26-ஆம் தேதி அன்று 45 ஆபரணங்களில் 43 ஆபரணங்களை வழங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக திருப்பதி தேவஸ்தானம் முறைப்படி பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. கோயில் வளாகத்திற்குள் அமைந்திருக்கும் ரங்கநாயகர் மண்டபத்தில் தான் இந்த ஆபரணங்கள் ஒப்படைக்கப்பட உள்ளன. அந்த பக்தரின் இறை பக்தி உண்மையிலேயே பக்தர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
