1998-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் வெறும் 50 இருக்கைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது தான் ஸ்ரீ ஆனந்தாஸ். இன்று 30 வருடங்களுக்கு பிறகு உணவகம், இனிப்புகள், கார வகைகள், பேக்கரி என பல துறைகளில் கால் பதித்து கோடிகளில் வருமானம் ஈட்டும் சாம்ராஜ்யமாக வளர்ந்துள்ளது. கோயம்புத்தூர் மட்டுமல்ல தற்போது பல ஊர்களிலும் ஸ்ரீ ஆனந்தாஸ் இயங்கி வருகிறது. 2017-ஆம் ஆண்டில் உணவகம் மட்டுமின்றி இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்வதிலும் களம் இறங்கியது.
பாதாம் ரோஸ் லட்டு, குல்கந்து பிஸ்கட், இளநீர் அல்வா போன்ற தனித்துவமான 300-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. பல ஆண்டுகளாக வெளியில் இருந்து எந்த முதலீடும் பெறாமல் இயங்கிய இந்நிறுவனம் சமீபத்தில் பெரிய முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனால் இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் ரூ.1900 கோடியாக உயர்ந்துள்ளது.

பொதுவாக இரண்டு உறவினர்கள் சேர்ந்து தொழில் செய்தால் இருவருக்குள்ளும் பிரச்சனை வரும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த அபார வளர்ச்சிக்கு பின்னால் இந்த தொழிலை சரிவர வழி நடத்தி வரும் நான்கு உறவினர்கள் இருக்கின்றனர்.
கோவையைச் சேர்ந்த நான்கு உறவினர்கள் தான் இன்றளவும் எந்த சண்டை சச்சரவும் இன்றி கடையை நடத்தி வருகின்றனர். கோவை காந்திபுரம் பகுதியில் வெறும் 50 சீட்களுடன் தொடங்கிய ஸ்ரீ ஆனந்தாஸ். 2000-ஆம் ஆண்டில் ஆர்.எஸ். புரம் மற்றும் சுந்தராபுரம் ஆகிய இடங்களில் கொண்டுவரப்பட்டது. 2005-ஆம் ஆண்டில் வடவள்ளியிலும் ஒரு கிளை தொடங்கப்பட்டது.
ஏறக்குறைய 20 ஆண்டுகள் வரை உணவு விற்பனையில் மட்டும் தான் ஸ்ரீ ஆனந்தாஸ் கவனம் செலுத்தி வந்தது. ஆனால் 2017-ஆம் ஆண்டில் கோவையில் உள்ள தங்கள் உணவகத்துக்குள்ளேயே இனிப்பு மற்றும் கார வகைகளை முதன்முதலாக அறிமுகம் செய்தனர். தனியாக கடை திறக்காமல் உணவகத் தொழிலோடு இணைத்து இனிப்பு கார வகைகளை கொண்டு வந்ததால் சாப்பிட வரும் நபர்களும் தொடர்ந்து வாங்கிச் செல்ல ஆரம்பித்தனர். அப்படி தொடங்கப்பட்ட நிறுவனத்தில் இன்று 300-க்கும் மேற்பட்ட இனிப்பு கார வகைகள் கிடைக்கிறது. அதில் 100-க்கும் மேற்பட்டவை ஆன்லைனிலும் விற்பனை செய்யப்படுகிறது.
வருமான வளர்ச்சி: கடந்த சில ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் வருமானம் அசுர வேகத்தில் அதிகரித்தது. 2019-ஆம் நிதியாண்டில் ரூ.67.20 கோடியாக இருந்த வருமானம் 2025-ஆம் நிதியாண்டில் ரூ.284.90 கோடியாக அதிகரித்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஸ்ரீ ஆனந்தாஸ் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 28 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏ91 பார்ட்னர்ஸ் என்னும் நிறுவனத்தின் மூலம் ஸ்ரீ ஆனந்தாஸ் ரூ.175 கோடி முதலீடு திரட்டியது. அதைத் தொடர்ந்து 2026-ஆம் ஆண்டு நவம்பரில் ஆர்யா வெஞ்சர்ஸ் மூலம் ரூ.110 கோடியும், வாட்டர்ஃபீல்ட் அட்வைசர்ஸ் மூலம் ரூ.15 கோடியும் திரட்டியுள்ளது. இன்னும் சில நிறுவனங்களும் ஸ்ரீ ஆனந்தாஸில் முதலீடு செய்துள்ளன.இதனால் இந்நிறுவனத்தின் மதிப்பு ரூ.1900 கோடியாக அதிகரித்துள்ளது.
இன்று இந்தியா மட்டுமல்ல ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து என பிற வளைகுடா நாடுகளுக்கும் இனிப்பு மற்றும் கார வகைகளை எக்ஸ்போர்ட் செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications
