உலகளவில் விவசாயிகள் அதிகம் இருக்கும் நாடு இந்தியா. அதற்கு ஏற்ப இங்கு உற்பத்தியும் சற்று அதிகம் தான். ஆனால் விளைவிக்கப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகள் மக்களை சென்றடைவதற்கு முன்பே பாதி வீணாகிவிடுகின்றன. இதற்கு காரணம் இந்தியாவில் போதுமான அளவு சேமிப்புக் கிடங்குகள் மற்றும் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் இல்லாததுதான் என்று ஜெரோதா நிறுவனத்தின் இணை நிறுவனரும் தொழிலதிபருமான நிதின் காமத் தன்னுடைய X பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களை பிரித்து அவற்றை சுத்தம் செய்து பிற இடங்களுக்கு அனுப்புவதற்கு 70,000 பேக் ஹவுஸ் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது இந்தியாவில் 1300 பேக் ஹவுஸ் மட்டுமே இருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 68,700 பேக் ஹவுஸ்கள் பற்றாக்குறையாக இருக்கின்றன. பேக் ஹவுஸ் என்பது விளை பொருட்களை தரம் பிரித்து, பேக்கிங் செய்து, பதப்படுத்தும் மையம்.

அதேபோல குளிரூட்டப்பட்ட சரக்கு வாகனங்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் குறைவாகவே இருக்கிறது. தற்போது நம் நாட்டில் 62,000 குளிரூட்டப்பட்ட லாரிகள் தேவைப்படுகிறது. இருந்தாலும் வெறும் 19,000 லாரிகள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது. மீதமுள்ள 43,000 லாரிகள் இன்னும் தேவைப்படுகின்றன. இது போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் தான் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.57,000 கோடி மதிப்பிலான பழங்கள் மற்றும் காய்கறிகள் வீணாகின்றன.
இந்தியாவில் இன்னும் குளிர்பதன கிடங்குகள் குறைவாகவே இருக்கிறது. இதனால் விலைப்பொருட்கள் சீக்கிரம் வீணாகி விடுகின்றன. எப்போதெல்லாம் விளைபொருட்கள் வீணாகிறதோ அந்த நேரங்களில் சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டு காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை கடுமையாக அதிகரிக்கும். எனவே குளிரூட்டப்பட்ட லாரிகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளை அதிகப்படுத்துவதன் மூலம் இத்தகைய விலை உயர்வு ஏற்படுவதை பெருமளவில் தவிர்க்க முடியும்.
நிதின் காமத் பால் விற்பனையையும், பழம் மற்றும் காய்கறி விற்பனையையும் ஒப்பிட்டு சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். கடையில் 100 ரூபாய்க்கு பால் வாங்கினால் அதில் ரூ. 70 ரூபாய் பண்ணை வைத்திருக்கும் விவசாயிக்கு கிடைக்கிறது. மீதி ரூ,30 மட்டுமே கடைக்காரரின் லாபம், போக்குவரத்து மற்றும் பேக்கிங் செலவாக இருக்கிறது. ஏனெனில் பெரும்பாலான பால் உற்பத்தியாளர்கள் நேரடியாக கிராமங்களுக்கு சென்று அங்குள்ள விவசாயிகளிடம் இருந்து பாலை கொள்முதல் செய்கின்றனர். இதனால் எந்த இடைத்தரகர்களும் இல்லாமல் நேரடியாக பண்ணை வைத்திருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கிறது.
ஆனால் 100 ரூபாய்க்கு தக்காளி வாங்கினால் அதை கஷ்டப்பட்டு விளைவித்த விவசாயிக்கு வெறும் 33 முதல் 37 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. மீதம் இருக்கும் தொகை மண்டி, மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகளுக்கே செல்கிறது. இதில் பாதி காய்கறிகள் அழுகி வீணாகி விடுவதால் அதில் ஏற்படும் நஷ்டத்தை கழித்து விட்டு பார்த்தால் கடைசியில் விவசாயிக்கு கிடைக்கும் பணம் மிகக் குறைவாகவே இருக்கிறது.
விளை நிலங்களில் இருந்து விளைவிக்கும் பொருட்களை பெரு நகரங்களுக்கு கொண்டு சேர்ப்பதில் பெரிய வணிக வாய்ப்பு இருக்கிறது. இதை யார் தொடங்குகிறார்களோ அவர்களுக்கு லாபம் அதிகமாக கிடைக்கும் என்பதை தான் தன்னுடைய X பதிவின் மூலம் நிதின் காமத் தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications
