துபாயில் ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்கி வந்தவர் ஆரோஹி சூர்யா. ஆனால் திடீரென ஏற்பட்ட உடல்நலப் பிரச்சனையால் அந்த வேலையை ராஜினாமா செய்தார். அதன் பிறகு வேலையில்லாமல் தவித்த ஆரோஹிக்கு தொழில் தொடங்கலாம் என்ற எண்ணம் வந்தது. அப்படி ஆரம்பிக்கப்பட்டது தான் "ஓட்டிஷ் பால் ப்ராண்ட்". இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர் சம்பளமாக வாங்கி வந்த ரு.1 கோடியை தாண்டி தற்போது வருமானம் பார்த்து வருகிறார்.
லக்னோவில் பிறந்தவர் ஆரோஹி சூர்யா. இவர் ஜெய்ப்பூரில் இருக்கும் பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் துபாயில் உள்ள ஐஎம்டி கல்லூரியில் எம்பிஏ பயின்றார். அதன் பிறகு சுமார் 7 ஆண்டுகள் துபாயில் பணியாற்றினார். ஹச்டிசி என்ற நிறுவனத்தில் மார்க்கெட்டிங் ஆபிஸராக தன்னுடைய பணி வாழ்க்கையை தொடங்கி மத்திய கிழக்கு நாடுகளில் மார்க்கெட்டிங் ஆபிஸராக ப்ரோமோஷன் பெற்று ரூ.1 கோடி சம்பளம் பெறும் அளவுக்கு உயர்ந்தார்.

பணிபுரியும் போது வயிறு உப்புசம் மற்றும் பிற ஹார்மோன் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட ஆரோஹி தன்னுடைய வேலையை ராஜினாமா செய்தார். 2022-ஆம் ஆண்டில் இந்தியா திரும்பினார். அப்போது அவருடைய தாயாருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
மருத்துவர்கள் பால் பொருட்களை முற்றிலும் தவிர்க்கும் படி அறிவுரை வழங்கினர். தன்னுடைய தாயாருக்கு பசும்பாலுக்கு மாற்றாக ஏதாவது கொடுக்க வேண்டும் என்பதற்காகவே லாக்டோஸ் இல்லாத.. அதே நேரம் எளிதில் ஜீரணமாகக் கூடிய ஓட்ஸ் பாலை தயாரிக்கத் தொடங்கினார். அங்கிருந்து உருவானது தான் அவர் ஆரம்பித்த "டான்சிங் கவ்" என்ற நிறுவனம்.
2022-ஆம் ஆண்டில் ஆரோஹி தன்னுடைய கணவர் அன்மோலுடன் இணைந்து டான்சிங் கவ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதற்காக ஆரம்பத்தில் தங்களுடைய சேமிப்பிலிருந்து ரூ.60 லட்சத்தை முதலீடு செய்தனர். டீ, காபி, பாயாசம் மற்றும் இனிப்பு வகைகளுக்கு பயன்படுத்தக்கூடிய மாட்டுப் பாலுக்கு பதிலாக சுவையான அதே நேரம் சத்தான ஓட்ஸ் பாலை உருவாக்கினர். இதை ரெசிப்பியாக செய்ய அவர்களுக்கு சுமார் பத்து மாதங்கள் எடுத்தது.
முழுக்க முழுக்க தாவர அடிப்படையிலான பால் என்பதால்.. இதை சரியாக உற்பத்தி செய்ய பல தொழிற்சாலைகளை தேடி அலைந்துள்ளார் சூர்யா. இறுதியாக ஒரு தொழிற்சாலையைக் கண்டறிந்து பாலை தயாரித்து பேக்கிங் செய்து பெற்று வருகின்றனர். 2023-ஆம் ஆண்டின் மார்ச் மாதம் தங்கள் நிறுவனத்தை இரண்டு தயாரிப்புகளுடன் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தனர். ஒன்று ஓட்டிஷ் எக்ஸ்ட்ரா கிரீமி ஓட் மில்க் மற்றொன்று ஓட்டிஷ் ரிச் சாக்லேட் மில்க். டீ, காபி மற்றும் இனிப்புகளுக்கு பயன்படுத்த ஓட்டிஷ் எக்ஸ்ட்ரா கிரீமி ஓட் மில்க்கைப் பயன்படுத்தலாம்.ஓட்டிஷ் ரிச் சாக்லேட் மில்க்கை அப்படியே குடிக்கலாம்.
விலங்குகள் துன்புறுத்தப்படுவதையும்.. பால் உற்பத்திக்காக அவற்றுக்கு ஹார்மோன் ஊசி செலுத்தப்படுவதையும் தெரிந்து கொண்டபோது தான் ஆரோஹிக்கு மாட்டு பாலுக்கு பதிலாக ஓட்ஸ் பால் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமே வந்தது. பால் பொருட்களை கைவிடுவது அவருக்கும் எளிதான விஷயமாக இல்லை. ஏனெனில் எல்லோரைப் போலவும் பால், டீ, காபி, மாம்பழ மில்க் ஷேக் என அனைத்தையும் விரும்பி பருகியவர் இவர். இருந்தாலும் விலங்குகள் படும் அவஸ்தையை பார்த்து முழுக்க முழுக்க தாவர அடிப்படையிலான பாலை தயாரிக்க வேண்டும் என்று எண்ணினார்.
ஆரம்பத்தில் பல ரெஸ்டாரண்டுகளுக்கு ஃப்ரீயாக தங்களுடைய தயாரிப்புகளை வழங்கியுள்ளனர். இப்போது டான்சிங் கவ் நிறுவனத்திற்கு முக்கிய வாடிக்கையாளர்களாக இருக்கும் பல கஃபேக்கள் இவர்களிடமிருந்து ப்ரீ சாம்பிள் வாங்கி பயன்படுத்தியவர்கள் தான்.
2024-ஆம் நிதியாண்டில் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் நிறுவனத்தின் இணையதளம் மூலம் சுமார் 30000 வாடிக்கையாளர்களை சென்றடைந்து ரூ.96 லட்சம் வருமானம் ஈட்டியது. இன்று இந்தியா முழுவதிலும் 500-க்கும் மேற்பட்ட உணவகங்கள் இவர்களிடம் இருந்து ஓட்ஸ் பாலை வாங்கி வருகின்றன. 2025-ம் நிதியாண்டில் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.2 கோடி. 2026-ஆம் நிதி ஆண்டில் ரூ.4.8 கோடி வருமானம் ஈட்ட ஆரோஹியும் அவருடைய கணவரும் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
