2023ம் ஆண்டு தொழில்துறையினருக்கு ஒரு சிறப்பான ஆண்டாக இருந்து வருகிறது. இந்த ஆண்டில் புதிதாக பல கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். 2023ம் ஆண்டுக்கான போர்பஸ் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் புதிய வரவாக மும்பையை சேர்ந்த டானி குடும்பம் இடம் பிடித்துள்ளது.
டானி குடும்பம் என்றால் டக்கென தெரியவில்லை, ஆனால் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவன குடும்பம் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும். அந்நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகமற்ற இயக்குனரான மறைந்த அஸ்வின் டானியின் வாரிசுகள் அடங்கியது தான் டானி குடும்பம். போர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இந்த குடும்பம் 22வது இடத்தில் உள்ளது. இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் ரூ.67,841 கோடியாகும்.

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் தொடக்கம், நிறுவனத்தை அடுத்த உயரத்துக்கு எடுத்து சென்ற அஸ்வின் டானியின் வாழ்க்கை வரலாறு போன்றவற்றை பற்றி பார்ப்போம். 1942ல் அஸ்வின் டானியின் தந்தை சூர்யகாந்த் டானி மற்றும் மேலும் 3 பேரால் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.
இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்கள் இந்தியாவில் தற்காலிகமாக பெயிண்ட்களை தடை செய்தபோது, சொந்தமாக பெயிண்ட் நிறுவனத்தை துவங்க வேண்டும் என்ற யோசனையை சூர்யகாந்த் டானி கொண்டிருந்தார்.
அந்த காலகட்டத்தில் இந்தியாவில் ஷாலிமர் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட வெளி நாட்டு நிறுவனங்கள் தான் முன்னணியில் இருந்தது, ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் நிறைந்த இந்த காலகட்டத்தில் பிறந்தது தான் ஏசியன் ஆயில் & பெயிண்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட்.
சம்பக்லால் சோக்சி, சிமன்லால் சோக்சி, சூர்யகாந்த் டானி மற்றும் அரவிந்த் வக்கீல் ஆகிய 4 பேரும் தான் இன்றைய ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் உருவாக முக்கியமான காரணமானவர்கள்.
இன்று இந்நிறுவனம் ஆசியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. நிறுவனத்தை தொடங்கியது என்னவோ சூர்யகாந்த் டானியாக இருந்தாலும், நிறுவனத்தை இந்த அளவுக்கு உயர்த்தியது அவரது மகனான அஸ்வின் டானிதான்.
1944 செப்டம்பர் 26ம் தேதியன்று மும்பையில் பிறந்தவர் அஸ்வின் டானி. 1966ல் மும்பை பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இதனை தொடர்ந்து மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அக்ரான் பல்கலைக்கழகத்தில் முதுகலை வேதியியல் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றார்.
அதன் பிறகு டெட்ராய்டில் விஞ்ஞானியாக பணியாற்ற தொடங்கினார். இந்த சூழ்நிலையில் காலத்தின் கட்டாயமாக 1968ல் நிறுவனத்தில் மூத்த நிர்வாகியாக சேர்ந்தார். இவரது தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தொழில் முனைவோர் ஆர்வத்தால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தையிலும் ஏசியன் பெயிண்ட்ஸ் வளர்ச்சி அடைய தொடங்கியது.
கம்ப்யூட்டர் கலர் மிக்சிங் என்ற கான்செப்ட்டை முதன் முதலில் பரப்பியவர். இது இன்று பெயிண்ட்கள், பாலிமர்கள், பிரிண்டிங் மைகள் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் போன்ற துறைகளில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
1997 முதல் 2009 வரை நிறுவனத்தின் துணை தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றினார். பின்னர் அவர் நிர்வாகமற்ற தலைவராக நியமிக்கப்பட்டார். அது முதல் 2021ல் அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறும் வரை அவர் அந்த பதவியில் இருந்தார். இந்த ஆண்டு செப்டம்பர் 28ம் தேதியன்று காலமானார். அவர் இறக்கும்போது அவருடைய சொத்து மதிப்பு ரூ.66,400 கோடியாக இருந்தது.
ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் ரூ.34,030 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 19 சதவீதம் அதிகமாகும். அஸ்வின் டானியின் மகன் மாலவ் தற்போது இந்நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் உள்ளார். இந்நிறுவனம் தனது வருவாயில் 98 சதவீதத்தை உள்நாட்டில் இருந்து பெறுகிறது. இந்நிறுவனம் வீட்டு பெயிண்ட் சேவைகள் மற்றும் உள்வடிவமைப்பு சேவைகளையும் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications