சென்னை: நம் நாட்டில் எந்தவொரு வர்த்தக தொடர்பு இல்லாத குடும்பத்தில் இருந்து தொழில்துறையில் சாதித்த பல தொழிலதிபர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு தொழிலதிபர்களில் ஒருவர்தான் சந்தீப் என்ஜினீயர். முதல் பிஸினஸில் ரூ. 5 ஆயிரம் ரூபாயை நஷ்டத்தை சந்தித்த சந்தீப் என்ஜினீயரின் இன்றைய சொத்து மதிப்பு ரூ.27,893 கோடியாகும். போர்ப்ஸ் வெளியிட்ட இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களில் பட்டியலில் சந்தீப் என்ஜினீயர் இடம் பிடித்தார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த சந்தீப் என்ஜினீயர் தனது படிப்பை முடித்தவுடன் கெடிலா லேப் நிறுவனத்தில் சேர்ந்தார். சுமார் இரண்டரை ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய சந்தீப் என்ஜினீயருக்கு தொழில் தொடங்குவோம் என்ற எண்ணம் ஏற்பட்டது.
சந்தீப் என்ஜினீயர் தனது எண்ணத்தை செயல்படுத்த அந்த வேலையை விட்டார். 1981ல் தனது முதல் நிறுவனத்தை தொடங்கினார். சுவையூட்டப்பட்ட இசப்கோல் என்ற நார்ச்சத்து உணவை விநியோகம் செய்யும் வர்த்தகத்தை மேற்கொண்டார். பெரிய தொழிலதிபராக வேண்டும் என்ற அவரது இலக்கின் ஆரம்ப கட்ட முயற்சி தோல்வியில் அடைந்தது. சில்லரை வியாபாரிகள் தங்களுக்கு பொருட்களை கடனாக வழங்க வேண்டும் என்று விரும்பினர். இதனால் ரூ.5 ஆயிரம் நஷ்டத்துடன் அந்த தொழிலை மூட வேண்டிய நிலை சந்தீப் என்ஜினீயருக்கு ஏற்பட்டது. 1980களில் ரூ.5 ஆயிரம் என்பது பெரிய தொகையாகும். முதல் முயற்சி பெரிய தோல்வியை சந்தித்தபோதிலும், சந்தீப் என்ஜினீயர் தனது கனவை கைவிடவில்லை.

1987ல் ஸ்ரீ கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். கெடிலா ஹெல்த்கேர் தலைவர் பங்கஜ் படேலின் பரிந்துரையின் பேரின் ஆக்டிவ் மருத்துவ கருவிகளை உற்பத்தி செய்ய தொடங்கினார். தனது தயாரிப்புகளை கெடிலா நிறுவனதுக்கு விற்பனை செய்வதற்காக அந்த நிறுவனத்துடன் சந்தீப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பொருட்களின் தரம் மோசமாக இருந்ததால் அந்நிறுவனம் மறுத்து விட்டது. இதன் விளைவாக உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலைக்கு சந்தீப் தள்ளப்பட்டார். அதன் பிறகு கேர் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அதிக காம்பௌண்ட்ஸ் மற்றும் அதிக தரமான பொருட்களை தயாரிக்க தொடங்கினார். இறுதியில் லாபம் சம்பாதிக்க தொடங்கினார்.
1998ல் அஸ்ட்ரால் பாலிடெக்னிக் என்ற சி.பி.வி.சி. பைப் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் சந்தீப் என்ஜினீயரை வாழ்க்கையில் பல உயரங்களை அடைய செய்தது. 1990களில் அமெரிக்காவில் சி.பி.வி.சி. குழாய்களுக்கு அதிக தேவை இருந்தது. அதேசமயம் 1998க்கு முன்பு வரை இந்த குழாய்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை. சி.பி.வி.சி. குழாய்களுக்கு நம் நாட்டில் வளமான வர்த்தக வாய்ப்பு இருப்பதை உணர்ந்த சந்தீப் என்ஜினீயர் அஸ்ட்ரல் பாலிடெக்னிக் நிறுவனத்தை தொடங்கினார். அஸ்ட்ரல் பைப்களை தயாரிக்க தொடங்கினார். இது இன்று இந்திய பிளம்பிங் சந்தையில் முன்னணி தயாரிப்பாக விளங்குகிறது. இந்நிறுவனம் பசைகள், பாத்வேர் மற்றும் பெயிண்ட்களையும் தயாரிக்கிறது. சந்தீப் என்ஜினீயர் தனது நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக சல்மான் கானை நியமித்தார்.


Click it and Unblock the Notifications