2024 ஜனவரி 22ம் தேதியன்று அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவுக்கு இன்னும் 60 நாட்களே உள்ளதால், இரவு பகலுமாக உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த கோயில் ரூ.1,800 கோடி செலவில் கட்டப்படுகிறது. எதிர்பார்த்த மாதிரி ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

தற்போது ராம் மந்திர் சேக்ஷ்ரா அறக்கட்டளை ராமர் கோயிலுக்கு அர்ச்சகர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. ராமர் கோயிலுக்கு அர்ச்சகர்கள் தேவை என்று விளம்பரம் செய்தது. இதனையடுத்து ஆயிரக்கணக்கான பேர் விண்ணப்பம் செய்தனர். இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், குறைந்தபட்சம் 3 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இதில் 200 பேர் மட்டுமே தகுதியின் அடிப்படையில் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அயோத்தியில் உள்ள விஸ்வ இந்து பரிஷத்தின் தலைமையிடமான கர்சேவக் புரத்தில் நேர்காணலை எதிர்கொள்கின்றனர்.
விருந்தாவனத்தை சேர்ந்த இந்து மத போதகர் ஜெய்காந்த் மிஸ்ரா மற்றும் மகான்களான அயோத்தியை சேர்ந்த மிதிலேஷ் நந்தினி சரண் மற்றம் சத்யநாராயண் தாஸ் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழு, இந்த நேர்காணலை நடத்துகிறது. அறக்கட்டளை 20 பேரை தேர்வு செய்யும். இவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள். ஆறு மாதம் உறைவிட பயிற்சிக்கு பிறகு வெவ்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
தேர்வு செய்யப்படாதவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். எதிர்காலத்தில் உருவாக்கப்படக் கூடிய அர்ச்சகர் பதவிகளுக்கும் இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
பயிற்சியின்போது, தேர்வர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் இலவசம். உதவி தொகையாக ரூ.2,000 வழங்கப்படும் என்று தெரிவித்தார். ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு அயோத்தி நகரை அழகுப்படுத்தும் பணிகளை யோகி அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications