இந்தியாவின் மிகப்பெரிய ஸ்மால் பைனான்ஸ் வங்கி ஏ.யு. ஸ்மால் பைனான்ஸ் பேங்க், 2017ல் ராஜஸ்தானை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டது. வட மாநிலங்களில் சிறப்பான வளர்ச்சி கண்டு வரும் ஏ.யு. ஸ்மால் பைனான்ஸ் பேங்க், தென்னிந்தியாவிலும் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கர்நாடகாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஃபின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கியை பங்குகள் வாயிலாக கையகப்படுத்தி வர்த்தகத்தை இணைக்க உள்ளது. ரூ.4,411 கோடி மதிப்பிலான பங்கு பரிவர்த்தனை வாயிலாக ஃபின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கியை ஏ.யு. ஸ்மால் பைனான்ஸ் பேங்க் தன்னுடன் இணைத்து கொள்ள உள்ளது.

தற்போது ஃபின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கியை இணைத்து கொள்ள ஏ.யு. ஸ்மால் பைனான்ஸ் பேங்கின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்து விட்டது. வங்கிகள் இணைப்பு திட்டத்தின்படி, ஃபின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் பங்குதாரர்கள் தங்களது ஒவ்வொரு 2 ஆயிரம் ஈக்விட்டி பங்குகளுக்கும், ஏ.யு. ஸ்மால் பைனான்ஸ் பேங்கின் 579 ஈக்விட்டி பங்குகளை பெறுவார்கள்.
ஃபின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கியை இணைத்து கொள்ள இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்து விட்டனர் என்ற தகவலை ஏ.யு. ஸ்மால் பைனான்ஸ் பேங்க் அறிவித்ததையடுத்து, ஏ.யு. ஸ்மால் பைனான்ஸ் பேங்கின் பங்கு விலை இன்று வர்த்தகத்தின் இடையே கடும் சரிவை சந்தித்தது.
இன்று மும்பை பங்குச் சந்தையில் ஏ.யு. ஸ்மால் பைனான்ஸ் பேங்கின் விலை வர்த்தகத்தின் இடையே சுமார் 8.5 சதவீதம் சரிந்து ரூ.630.90ஆக குறைந்தது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும். ஏ.யு. ஸ்மால் பைனான்ஸ் பேங்க் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 21 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. அதேசமயம் இந்த ஆண்டில் இதுவரை ஏ.யு. ஸ்மால் பைனான்ஸ் பேங்க் பங்கின் விலை 4 சதவீதம் குறைந்துள்ளது.
ஃபின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கி கடந்த செப்டம்பரில் புதிய பங்கு வெளியீட்டில் (ஐ.பி.ஓ.) களமிறங்கி ரூ.625 கோடி திரட்ட செபியிடம் ஒப்புதல் பெற்று இருந்தது. அதற்கு பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை தற்போது, ஃபின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கியை ஏ.யு. ஸ்மால் பைனான்ஸ் பேங்க் தன்னுடன் இணைத்து கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.
ஃபின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கிக்கு 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1,292 கிளைகளை கொண்டுள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் ஃபின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கி வலுவான வர்த்தக இருப்பை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications