சென்னை: தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் தனத்திரியோதசி என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் குறிப்பாக வட இந்திய பகுதிகளில் இந்த நாளில் வீட்டில் குபேர பூஜை செய்து தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை வாங்குகின்றனர். இந்த நாளில் தங்கத்தையும் வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்கி தீபாவளி அன்று மாலை லட்சுமி குபேர பூஜை நடத்தினால் வீட்டில் மேலும் மேலும் தங்கம் சேரும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
இந்த நாளை தந்தேராஸ் தினம் மற்றும் தனத்திரியோதசி என்று அழைக்கின்றனர். சிலர் இந்த நாட்களில் தங்கம் வாங்கும் பழக்கத்தை கொண்டு இருக்கின்றனர். சிலர் பங்குச் சந்தைகளில் கூட முதலீடு செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.

அக்ஷய திருதியை போல தனத்திரியோதசி தினத்தன்று தங்கம் வாங்குவது ஒரு வழக்கமாக மாறிவிட்டது. நடப்பு ஆண்டினை பொருத்தவரை அக்டோபர் 29ஆம் தேதி தனத்திரியோதசி தினமாக கருதப்படுகிறது. எனவே அந்த நாளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்குவது சிறந்ததாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் எந்தெந்த நேரத்தில் தனத்திரியோதசி முகூர்த்தம் வருகிறது என்பது குறித்து பஞ்சாங்கம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, சென்னையில் மாலை 6:44 மணி முதல் இரவு 8:11 மணி வரையும் பெங்களூருவில் 6: 55 மணி முதல் 8: 22 மணி வரையிலும் இந்த முகூர்த்தம் வருகிறதாம்.
அதேபோல மும்பையில் 7 மணியில் இருந்து 8:37 மணி வரையிலும், கொல்கத்தாவில் 5: 57 மணி முதல் 7:33 மணி வரையிலும் இந்த தனத்திரியோதசி முகூர்த்தம் வருகிறதாம். இந்த நேரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி , செம்பு, பித்தளை உள்ளிட்ட பொருட்களையும் வாங்குகின்றனர்.
மேலும் களிமண் அல்லது மெட்டலால் செய்யப்பட்ட லட்சுமி மற்றும் விநாயகர் சிலைகளை வாங்குவதும் வீட்டில் வளத்தை கொண்டு வரும் என மக்கள் நம்புகின்றனர். ஒரு சிலர் கார், போன் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்குவதை வாடிக்கையாக கொள்கின்றனர்.
தனத்திரியோதசி என்று அழைக்கப்படும் தந்தேராஸ் தினம் ஐந்து நாட்கள் தீபாவளி பண்டிகையின் தொடக்கத்தை குறிக்கிறது. செல்வம் எனப் பொருள் கொண்ட தன் என்ற வார்த்தை மற்றும் 15 சந்திர நாட்களின் 13 வது நாளான தேராஸ் ஆகியவற்றையும் இணைத்து தந்தேராஸ் என அழைக்கப்படுகிறது. இது ஒரு புதிய தொடக்கங்களுக்கான நல்ல நாளாக கருதப்படுகிறது. இந்த ஆண்டில் அக்டோபர் 29ஆம் தேதி இந்த திதி 10:31 மணிக்கு தொடங்கி மறுநாள் மதியம் 1:15 மணிக்கு முடிவடைகிறது.
Written by: Devika


Click it and Unblock the Notifications