இணையவழி குற்றம் அல்லது சைபர் குற்றம் என்பது, இணையம் அல்லது டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் சட்டவிரோதச் செயல்களைக் குறிக்கிறது. இணையவழி குற்றங்களில், கணினி ஒரு இலக்காகவோ அல்லது குற்றச்செயலை செய்யவோ பயன்படுத்தப்படுகிறது. அதிவேகமாக இணைய பயன்பாட்டால் உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் கையடக்க செல்போன் மூலம் உடனுக்குடன் அறிந்து கொள்ளும் அளவுக்கு அறிவியில் வளர்ச்சி அடைந்துள்ளதால், இது இணையவழி குற்றங்கள் அதிகரிப்பதற்கும் வழிவகுத்துள்ளது.
இந்த இணைய வழி குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், புதுப்புது உத்திகளை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடும் குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

சமூகத்தில் கணினிகளின் பயன்பாடு அதிகரித்து வருவதால் சைபர் கிரைம் குற்றங்கள் ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சைபர் குற்றங்களான ஹேக்கிங் அதாவது அதிநவீன தீங்கிழைக்கும் மென்பொருள் தாக்குதல்கள், இணைய நிதி மோசடிகள், KYC மோசடி, கிரிப்டோகரன்சி மோசடிகள், டிஜிட்டல் கைது போன்றவை மிகவும் அதிகமாக நிகழ்கின்றன.
இந்தநிலையில் அகமதாபாத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ரூ.7 கோடி அளவுக்கு வங்கி அதிகாரிகள் உதவியுடன் சைபர் மோசடி நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 7 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் ஒரு வங்கி அதிகாரி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இவர், அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வந்தவர். பயனர்களின் வங்கி கணக்குகளை தவறான பயன்படுத்தி மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்..இந்த மோசடியில் ஆன்லைன் கேசினோ மற்றும் இ-காமர்ஸ் தளங்களை தவறாக பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.இந்த வழக்கில், வங்கி ஊழியர்களின் உடந்தை இருப்பதாக போலீசார் சந்தேகப் படுகின்றனர். குறிப்பாக, குற்றவாளிகள் வங்கி ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது, அவற்றின் மூலம் கேமிங் செயலிகளிலிருந்து (app) அனுமதி இல்லாமல் பணத்தை எடுக்க முடிந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் விஜய் வாசேலா, நிதேஷ் மட்தா மற்றும் ஆதில் பார்மர் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் 2 நாட்களாக கிடுக்குபிடி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் வங்கி பாதுகாப்பு முறைகள் தொடர்பான கவலைகளை அதிகரித்துள்ள நிலையில், வங்கியில் செயல்படும் அதிகாரிகளின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


Click it and Unblock the Notifications