மும்பை: செப்டம்பர் காலாண்டில் ஆக்சிஸ் வங்கியின் லாபம் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனிடையே ஆக்சிஸ் பங்குகளை வாங்கலாமா, வேண்டாமா என்பது குறித்து நிபுணத்துவ கருத்து என்ன என்பதை அறியலாம் வாருங்கள்.

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி தனது 2023 செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கியின் நிதி நிலை முடிவுகள் எதிர்பார்ப்புகளை காட்டிலும் சிறப்பாக இருந்தது. இதன் எதிரொலியாக, பங்குச் சந்தையில் ஆக்சிஸ் வங்கி பங்கு விலை உயர்ந்தது. இன்று பங்குச் சந்தையில் பல முன்னணி வங்கி பங்குகளின் வீழ்ச்சி கண்டபோதிலும் ஆக்சிஸ் வங்கி பங்கு விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக்சிஸ் வங்கி 2023 செப்டம்பர் காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.5,863.56 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் ஆக்சிஸ் வங்கி தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.5,330 கோடி ஈட்டியிருந்தது. 2023 செப்டம்பர் காலாண்டில் ஆக்சிஸ் வங்கியின் நிகர வட்டி வருவாய் (வட்டி வருவாய்க்கும், செலவுக்கும் இடையிலான வித்தியாசம்) 18.87 சதவீதம் உயர்ந்து ரூ.12,315 கோடியாக அதிகரித்துள்ளது.
2023 செப்டம்பர் காலாண்டில் ஆக்சிஸ் வங்கியின் மொத்த வாராக் கடன் 1.73 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 0.41 சதவீதமாகவும் குறைந்துள்ளது. மேலும் கடந்த செப்டம்பர் காலாண்டில் நிகர வட்டி லாபவரம்பு 4.11 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆக்சிஸ் வங்கியின் லாபம், வட்டி வருவாய் மற்றும் வாராக் கடன் நிலவரம் உள்ளிட்டவை சிறப்பாக உள்ளது. அதேசமயம், ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக ஆக்சிஸ் வங்கியின் டெபாசிட் வளர்ச்சி குறைவாக உள்ளது என்று நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
தரகு நிறுவனமான மோதிலால் ஆஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ், ஆக்சிஸ் வங்கி பங்குகளை வாங்கலாம் என்ற தனது மதிப்பீட்டை தொடர்ந்துள்ளது. மேலும், ஆக்சிஸ் வங்கி பங்கின் இலக்கு விலையாக ரூ.1,150ஆக நிர்ணயம் செய்துள்ளது. கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விடீஸ், ஆக்சிஸ் வங்கி பங்கிற்கான இலக்கு விலையை ரூ.1,100 என்பதில் மாற்றம் செய்யவில்லை அதேபோல் ஆக்சிஸ் வங்கி பங்கினை வாங்கலாம் என்ற தனது மதிப்பீட்டையும் மாற்றவில்லை. மும்பை பங்குச் சந்தையில் ஆக்சிஸ் வங்கி பங்கு விலை 1.74 சதவீதம் உயர்ந்து ரூ.972.00ஆக இருந்தது. எனவே பங்கை வாங்குவது இப்போது நல்ல முடிவாக இருக்கும் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications