இந்தியாவில் தங்கத்தின் விலை சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறியிருக்கிறது. ஒரு சவரன் நகை வாங்க வேண்டும் என்றால் கூட 1.4 லட்சம் ரூபாய் வரை தேவை. சாதாரண மக்களுக்கு ஒரு மாத சம்பளமே இது கிடையாது என்பது தான் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை.
இந்தியாவில் தங்கம் விலை ஜனவரி மாதத்தில் புதிய உச்சங்களைத் தொட்டது. பிப்ரவரி மாதத்தில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பார்க்கும்போது சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 14 ,930 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,19,440 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்ந்து இருக்கக்கூடிய இந்த நிலையில் தான் சந்தையில் போலி தங்க நகைகள் வரத் தொடங்கி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

அதுவும் உண்மையான தங்கத்தை போலவே காட்சி தரக்கூடிய பங்களாதேஷ் ரெட் கோல்ட் இந்திய சந்தையில் தற்போது அதிகமாக பரவ தொடங்கி இருக்கிறதாம். பங்களாதேஷ் ரெட் கோல்ட் என்பது உண்மையான தங்கம் கிடையாது. செம்பு, நிக்கல் போன்ற உலோக கலவைகளை சேர்த்து உருவாக்குகிறார்கள். பார்ப்பதற்கு இது உண்மையான தங்கத்தை போலவே இருக்கும். ஆனால் உண்மையில் இது தங்கமே கிடையாது. அத்தனை எளிதாக இது ஒரு போலி நகை அல்லது ஒரு போலி தங்கம் என நம்மால் கண்டுபிடித்து விட முடியாது.
இதுதான் தற்போது இந்திய சந்தையில் அதிகமாக வரத் தொடங்கி இருக்கிறதாம். எனவே பொதுமக்கள் குறைந்த விலையில் தங்கம் கிடைக்கிறது என நம்பி சென்று இது போன்ற போலி நகைகளை வாங்கி ஏமாந்து விடக்கூடாது. எப்போதுமே நீங்கள் நகை வாங்கும் போது அந்த நகையில் ஹால்மார்க் குறியீடு இருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டும்.

இந்திய அரசாங்கம் ஒவ்வொரு தங்க நகையையும் ஆய்வு செய்து அது தூய்மையான தங்கம் தான் என்பதற்கு வழங்கக்கூடிய குறியீடு தான் HUID எனப்படும் ஹால்மார்க் குறியீடு, இந்த குறியீடு இருந்தால் மட்டுமே அந்த நகையை வாங்குங்கள் என அரசு தெரிவிக்கிறது. அதே போல நகை வாங்கும் முன்பு அந்த கடையின் நம்பகத்தன்மையையும் கவனிக்க வேண்டும்.
தங்கம் விலை உயர்ந்துவிட்ட சூழலில் குறைந்த விலைக்கு தருகிறோம், செய்கூலி சேதாரம் இல்லாமல் தருகிறோம், ஜிஎஸ்டி இல்லாமல் நகை வாங்கலாம் என ஆசை வார்த்தை கூறினால் அவர்களை நம்பாதீர்கள். அது போலி நகையாக கூட இருக்கலாம். ஏமாந்துவிட்டால் கையில் இருக்கும் மொத்த பணமும் காலி. எனவே எப்போது நகை வாங்கினாலும் நம்பகத் தன்மை கொண்ட கடையில் வாங்க வேண்டும், நகையில் உள்ள ஹால்மார்க் குறியீட்டை பார்க்க வேண்டும், குறிப்பாக நகை வாங்கியதற்கு உரிய ரசீதை பெற வேண்டும். அதில் நகையின் எடை, விலை, ஜிஎஸ்டி, ஆகிய விவரங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications