ஜப்பான் நாட்டின் மத்திய வங்கியான பேங்க் ஆப் ஜப்பான் (BoJ) வெள்ளிக்கிழமை அதாவது ஜனவரி 24 அன்று, தனது முக்கிய வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.5% ஆக நிர்ணயித்துள்ளது. 2008 உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிறகு ஜப்பான் நாட்டில் அதிகப்படியான பென்சமார்க் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதால், சர்வதேச பங்குச்சந்தைகளில் யென் கேரி டிரேட் மூலம் பெரும் பூதம் மீண்டும் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேங்க் ஆப் ஜப்பான்-ன் இந்த முடிவு உலகளாவிய சந்தைகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, காலை வேளையில் உயர்வுடன் இருந்த ஜப்பானிய நிக்கி குறியீடு திசை மாறி சரிந்துள்ளது. வட்டி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களில் காலையில் பதிவான 400 புள்ளிகள் உயர்வு, வெறும் 100 புள்ளிகளாகக் குறைந்துள்ளது.

இதேதொடர்ந்து அமெரிக்க பியூச்சர்ஸ் ஒப்பந்தங்களும் சரியத் துவங்கியுள்ளது, டாவ் ஜோன்ஸ் பியூச்சர்ஸ் ஒப்பந்தங்களும் சரிவு பாதைக்கு நுழைந்துள்ளது. இந்தியச் சந்தையில் இதன் தாக்கம் நேரடியாகவும், உடனடியாகவும் எதிரொலிக்கவில்லை, இதற்கு முக்கியமான காரணம் யென் கேரி டிரேட் வாயிலாக அமெரிக்கச் சந்தையில் தான் அதிகம் முதலீடு செய்யப்படுகிறது. இந்தியச் சந்தையில் நேரடி முதலீடுகள் என்பது மிகவும் குறைவு.
அமெரிக்க டாலருக்கு எதிரான ஜப்பானிய யென் மதிப்பு வட்டி விகித உயர்வுக்குப் பின்னர் உடனடியாக உயர்ந்துள்ளது. தற்போது அமெரிக்க டாலருக்கு எதிரான ஜப்பான் யென் மதிப்பு 155 அளவுக்கு வலுவடைந்தது.
2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜப்பான் நாட்டின் பணவீக்கம் 2% ஐ எட்டக்கூடும் என்று மத்திய வங்கி கணிக்கப்பட்டதால், பேங்க் ஆப் ஜப்பான்-ன் வட்டி விகித உயர்வு பெரும்பாலான சந்தை கண்காணிப்பாளர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது. ஜப்பானில் நாட்டின் அடிப்படை பணவீக்கம் சமீபத்தில் 16 மாத உச்சத்தை எட்டியுள்ளது.
பல ஆண்டுகளாக ஜப்பான் மத்திய வங்கி தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தைக் கிட்டத்தட்டப் பூஜ்ஜியமாகவே வைத்திருந்தது. இதனால் ஜப்பான் மக்கள் அந்நாட்டில் கடன் வாங்கி வெளிநாட்டுப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வழக்கத்தைக் கொண்டு இருந்தனர். அதாவது ஜப்பான் யென் மதிப்பும், வட்டி விகிதமும் குறைவாக இருக்கும் வரையில் இந்த முதலீட்டு முறைக்கு ஜாக்பாட் தான். ஆனால் இதில் ஏதேனும் தடுமாற்றம் வந்தால் வெளிநாட்டுச் சந்தையில் இருக்கும் ஜப்பான் முதலீடுகள் திரும்பத் தாய் நாட்டிற்கே திரும்பும். இது "யென் கேரி டிரேட்" என்று அழைக்கப்படுகிறது.
பேங்க் ஆப் ஜப்பான்-ன் வட்டி விகித உயர்வு இருந்தபோதிலும், இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை காலை வர்த்தகத்தில் சில தடுமாற்றத்தை எதிர்கொண்டாலும் உயர்வுடனே உள்ளது. நிஃப்டி 50 குறியீடு 89.80 புள்ளிகள் உயர்ந்து 23,295 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது, அதே சமயம் சென்செக்ஸ் 316.10 புள்ளிகள் உயர்ந்து 76,836 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications