இந்தியாவில் வங்கி கிளைகள் வழக்கமான வேலைநாட்களான திங்கள் முதல் வெள்ளியை தவிர்த்து மாதத்தின் முதல், மூன்றாவது மற்றும் ஐந்தாவது சனிக்கிழமைகள் செயல்படுகின்றன. வங்கிகளுக்கு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் விடுமுறை.
அண்மையில் வாரத்துக்கு ஐந்து நாள் வேலை என்ற வங்கி சங்கங்களின் பல ஆண்டு கோரிக்கைக்கு இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புதல் அளித்தது. ஆனால் அது நிதி அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்தால், வங்கி கிளைகளில் தினசரி வேலை நேரம் 45 நிமிடங்கள் நீடிக்கப்படும்.

கடந்த சில ஆண்டுகளாக வங்கிகளின் லாபம் நன்றாக அதிகரித்து வருவதால், ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளத்தில் கணிசமான உயர்வு அளிக்க வேண்டும் என்று சங்கங்கள் கோரி வருகின்றன. கோவிட் காலத்தில் பணிபுரிந்தது மற்றும் அரசின் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்ததை தவிர்த்து, வங்கிகளின் செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு நாங்கள் நிறைய முயற்சிகள் மேற்கொண்டோம் எனவே சம்பளத்தில் கணிசமான உயர்வு வழங்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.
தற்போது பொதுத்துறை மற்றும் பிரபல தனியார் துறை வங்கிகள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை 15 சதவீதம் உயர்த்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர, வாரத்துக்கு 5 நாள் வேலை திட்டத்தை விரைவாக வங்கிகள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளன.
கடந்த ஆகஸ்டில், நிதிக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினர் சுஷில் குமார் மோடி பேட்டி ஒன்றில், பொதுத்துறை வங்கி பணியாளர்களின் வாரத்துக்கு ஐந்து நாள் வேலை கோரிக்கை நியாயமானது. அரசாங்கம் விரைவில் பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இன்று வங்கி சேவைகள் டிஜிட்டல்மயமாகி விட்டது. மேலும் , ஏ.டி.எம். மற்றும் கேஷ் டெபாசிட் மிஷின்கள் வருகைக்கு பிறகு மக்கள் பணம் எடுக்க அல்லது டெபாசிட் செய்வதற்கு கட்டாயம் வங்கிகளுக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும், எந்த நேரத்திலும் பணத்தை டெபாசிட் செய்யவோ அல்லது எடுக்கவோ முடியும்.
இதனால் முந்தைய காலம் போன்று இந்த சேவைகளுக்காக வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளுக்கு செல்வது குறைந்து வருகிறது. இதனால் வங்கிகளுக்கு வாரத்துக்கு 5 நாள் வேலை என்பதை நடைமுறைப்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications