மும்பை: இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றங்கள் அதிகரித்திருக்கும் அதே வேளையில் டிஜிட்டல் முறையில் செய்யப்படும் மோசடிகளும் அதிகரித்தே வருகிறது.
இதனால் வாடிக்கையாளர்களின் தகவல்களை சரி பார்ப்பது மற்றும் டிஜிட்டல் பேங்கிங் சூழல் மீதான தாக்குதல்களை தடுப்பது என்பன போன்ற செயல்பாடுகளுக்காக வங்கிகள் தொழில்நுட்ப ஆதரவுக்காக தரவு பகுப்பாய்வு நிறுவனங்களை நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் குறித்த நம்பகமான தரவுகளை தந்து புதுமையான ஒரு தொழிலை உருவாக்கி இருக்கிறது மும்பையை அடிப்படையாகக் கொண்ட டேட்டா சுற்றம் (DATA SUTRAM) என்ற ஒரு ஸ்டார்ட் அப் .
இந்த நிறுவனம் இந்தஸ் இந்த் வங்கி, ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஐஎஃப்எஃப்எல் ஃபைனான்ஸ் மற்றும் டிஎம்ஐ ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்பான நம்பகமான மதிப்பீடுகளை தருகிறது.
2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டேட்டா சுற்றம் நிறுவனம் டி எஸ் ஆதென்டிகேட்டர் ட்ரஸ்ட் ஸ்கோர் (DS Authenticator trust score) என்ற ஒரு வழிமுறையை கையாண்டு வருகிறது. இதன்படி இந்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்களிடம் கணக்கு தொடங்க வரும் வாடிக்கையாளர்களின் விவரங்களை இந்த ட்ரஸ்ட் ஸ்கோர் மூலம் சரிபார்த்துக் கொள்ள முடியும்.
புதிதாக கணக்கு தொடங்குவது கடன் வழங்குவது போன்ற நடைமுறைகளின் போது அந்த வாடிக்கையாளர்கள் மீதான நம்பகத்தன்மைக்கான மதிப்பெண் என்பது ஜீரோவிலிருந்து ஆயிரம் வரை இந்த கருவியில் காட்டப்படும்.
வங்கிகளே பொதுவாக கேஒய்சி நடைமுறைகளை கொண்டுள்ளன. இருப்பினும் இதனை தாண்டியும் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகிறது என்கிறார் டேட்டா சுற்றம் நிறுவனத்தின் துணை நிறுவனர் ரஞ்சித் பட்டாச்சாரியா.
ஒரே ஐபி முகவரி, ஒரே இடம் மற்றும் ஒரே செல்போன் நம்பரை கொண்டு பல நபர்களின் பெயரில் வங்கி கணக்குகள் தொடங்கப்படுவதாகவும் பின் நாட்களில் இவை பெரிய மோசடிகளில் சென்று முடிவதாகவும் கூறுகிறார்.
இந்த ஸ்டார்ட் அப் அண்மைக்காலமாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இணைந்து தொழில்நுட்ப ரீதியான உதவிகளை வழங்கி வருகிறது. அண்மையில் கூட இந்த நிறுவனம் 5.4 மில்லியன் டாலர்களுக்கு நிதி திரட்டியது .
வங்கிகள் காலத்திற்கு ஏற்ப தங்களை நவீனப்படுத்தி டிஜிட்டல் தளங்களுக்கு மாறியுள்ளன. ஆனால் இந்த டிஜிட்டல் தளம் பல்வேறு சவால்களும் அச்சுறுத்தல்களும் நிறைந்த ஒரு அமைப்பாக இருக்கிறது.
இதிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வங்கிகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தொழில்நுட்ப ரீதியான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
டேட்டா சுற்றம் நிறுவனமானது யுபிஐ பேமெண்ட் மற்றும் வரி சார்ந்த நெட்வொர்க், டெலிவரி மற்றும் லாஜிஸ்டிக் நிறுவனங்களுடன் தொடர்புடைய இகாமர்ஸ் தளங்கள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் தகவல்களை ஒன்றாக திரட்டி அதனை பகுப்பாய்வு செய்து ஒரு டேட்டா செட்டை உருவாக்குகிறது.
இதன்படி வங்கிகளுக்கு லொகேஷன் அடிப்படையிலான ஆபத்தை கண்டறியக்கூடிய ஒரு ஆய்வினை இது வழங்குகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிகப்படியான கடன் நிலுவைகள் இருக்கின்றன, ஒரு குறிப்பிட்ட முகவரியில் மோசடிகள் அதிகமாக நடக்கின்றன என்பன போன்ற தகவல்களை இது வழங்குகிறது.
ஆர்பிஐ வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் டொமஸ்டிக் பேமென்ட் மோசடிகள் என்பது மார்ச் 2024 ஆம் ஆண்டு கணக்கின்படி 471 கோடி ரூபாய் என உள்ளது. இது கடந்த ஆண்டு 333 கோடி ரூபாயாக இருந்தது.
ஓராண்டிலேயே இது 42 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே வங்கிகள் இது போன்ற மோசடிகளிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள தரவு பகுப்பாய்வு நிறுவனங்களோடு இணைந்து செயல்பட வேண்டியுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications