மோசடி அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் தற்போது பொதுவான தொல்லையாகிவிட்டன. மொபைல் பயனர்கள் தொடர்ந்து வரும் ஸ்பேம் கால்களால் விரக்தி அடைந்துள்ளனர். இந்த அழைப்புகள் மூலம் மோசடிகள் மற்றும் நிதி மோசடி வழக்குகளும் அதிகரித்து வருகின்றன. பல பயனர்கள் தங்கள் வங்கிகளில் இருந்து உண்மையான அழைப்புகள் வந்துள்ளதாக நினைத்துக் கொண்டு இது போன்ற மோசடிகளுக்கு பலியாகின்றனர்.
மோசடி சம்பவங்கள் நடப்பதைத் தவிர்க்க வேண்டி இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பரிவர்த்தனை மற்றும் மார்க்கெட்டிங் அழைப்புகளை மேற்கொள்ள இரண்டு பிரத்தியேக நம்பரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சியின் மூலம் மொபைல் போன் பயனர்கள் மோசடி அழைப்புகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

இன்றெல்லாம் வங்கியில் இருந்து அழைப்பு விடுப்பதாக கூறித்தான் பல மோசடி சம்பவங்கள் நிகழ்கின்றன. இதற்கு தீர்வாக இரண்டே இரண்டு நம்பரை மட்டும் வங்கிகள் பயன்படுத்த தொடங்கினால் மக்களுக்கும் அது வங்கியில் இருந்து வரும் அழைப்புகளா? அல்லது வேறு ஏதேனும் மோசடிக்காரர்களின் அழைப்புகளா? என்பது தெரிந்துவிடும்.
சமீபத்திய ஆர்பிஐ அறிவிப்பின்படி, வங்கிகள் தற்போது பரிவர்த்தனை தொடர்பான அனைத்து அழைப்புகளுக்கும் 1600 என்று தொடங்கும் தொலைபேசி எண்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கை பயனர்களுக்கு உண்மையான அழைப்புகளை அடையாளம் காண உதவும்.
அதே நேரத்தில் 140 இல் தொடங்கும் எண்கள், விளம்பர அழைப்புகள் மற்றும் தனிநபர் கடன்கள், கிரெடிட் கார்டுகள் அல்லது காப்பீடு போன்ற சேவைகளை வழங்கும் SMS அறிவிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும்.
இந்த முயற்சி முக்கியமாக வங்கிகளை போலவே நடித்து மோசடி செய்பவர்களை தடுத்து நிறுத்த உதவும். ஆன்லைன் மற்றும் தொலைபேசி மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஆர்பிஐ தக்க நடவடிக்கை எடுத்துள்ளது. பெரும்பாலும் வங்கி ஊழியர்களாக காட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றி அதிக அளவில் பணம் பறிக்கின்றனர். இந்த நடவடிக்கை கண்டிப்பாக பலருக்கும் நிவாரணம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கியில் இருந்து எந்த ஒரு அறிவிப்பு வந்தாலும் அவற்றை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் விழிப்புணர்வுடன் செயல்பட முடியும். வங்கிகளில் இருந்து ஒரு வேலை அழைப்பே வந்தாலும்.. அவை உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை கேட்பதற்காக இருக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதையும் மீறி வங்கி விவரங்கள் கேட்கப்பட்டால் நேரடியாக வங்கி கிளைக்கு சென்று பார்வையிடலாம்.


Click it and Unblock the Notifications