பெங்களூரு: அண்மைக்காலமாக டிஜிட்டல் முறையில் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்கள் புதுப்புது வழிமுறைகளை கையாண்டு வருகின்றன. கொரியர் வந்திருப்பதாக கூறி மோசம் செய்வது, உங்களது அக்கவுண்ட் முடக்கப்பட்டு விடும் எனக் கூறி வங்கியில் இருந்து பேசுவது போல நமது ஓடிபி உள்ளிட்ட ரகசிய தகவல்களைப் பெற்று கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது போன்ற ஆன்லைன் வழியாக செய்யப்படும் மோசடிகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
அந்த வகையில் பெங்களுருவை சேர்ந்த ஒரு பெண், தான் சிக்க இருந்த மிகப்பெரிய நிதி மோசடி குறித்து எக்ஸ் தளத்தில் பதிவாக வெளியிட்டுள்ளார்.

அதிதி சோப்ரா தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மிகப்பெரிய நிதி மோசடியில் இருந்து நான் தப்பி இருக்கிறேன் எனக் கூறியுள்ளார். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது அதில் வயதானவர் போல பேசிய ஒரு நபர் "அதிதி உன் அப்பாவிற்கு நான் பணம் அனுப்ப வேண்டும், ஆனால் தற்போது அவருடைய கணக்கிற்கு என்னால் பணம் அனுப்ப முடியவில்லை.
எனவே அப்பா உன்னுடைய கணக்கிற்கு பணத்தை அனுப்பி விடுமாறு கூறினார். இதுதான் உன்னுடைய தொலைபேசி எண்ணா என உறுதி செய்யவே உன்னை அழைத்தேன்" என கூறி இருக்கிறார்.
மேலும் தன்னுடைய வங்கிக் கணக்கில் பிரச்சனைகள் இருப்பதாகவும் பணம் வந்து சேர்ந்து விட்டதா என்பது குறித்து தனக்கு தகவல் தெரிவிக்குமாறு அந்த நபர் கூறியிருக்கிறார். இந்த அழைப்பில் இருக்கும் போது அதிதி சோப்ராவிற்கு இரண்டு எஸ்எம்எஸ் வந்துள்ளன. அது அவரது கணக்கிற்கு பணம் வந்ததற்கான உறுதிப்படுத்தக்கூடிய எஸ்எம்எஸ் ஆக இருந்துள்ளது.
முதலில் ரூ.10,000 மற்றும் அதனை அடுத்து ரூ.30,000 தொகை அதிதியின் அக்கவுண்டிற்கு வந்திருப்பதாக அந்த எஸ்எம்எஸ்-இல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து எதிர் தரப்பில் பேசிய அந்த நபர் நான் தவறாக ரூ.3,000க்கு பதிலாக ரூ.30,000ஐ அனுப்பி விட்டேன். மீதமுள்ள தொகையை எனக்கு அனுப்பி விடு நான் தற்போது மருத்துவமனையில் இருக்கிறேன் எனக்கு அவசரமாக அந்த பணம் தேவைப்படுகிறது என அந்த நபர் கூறியிருக்கிறார்.
தன்னுடைய தந்தை இதுபோல தனக்கு ஒருவர் பணம் கொடுக்க வேண்டும் என்பது குறித்து இதுவரை கூறவே இல்லையே என்பது அதிதிக்கு நினைவுக்கு வந்திருக்கிறது. மேலும் தனக்கு வந்த எஸ்எம்எஸ்-ஐ படித்துப் பார்த்துள்ளார் அது வங்கியில் இருந்து வந்தது போல இல்லாமல் ஒரு பத்து இலக்க போன் நம்பரிலிருந்து வந்ததை கண்டறிந்தார்.
இதனை அடுத்து தன்னை ஏமாற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள் என்பது அறிந்தவர் உடனடியாக தன்னுடைய வங்கிக் கணக்கில் லாகின் செய்து பார்த்துள்ளார் .அவரது வங்கி கணக்கில் எந்த ஒரு பணமும் வரவில்லை என்பது அப்போது தான் தெரிய வந்தது.
தனக்கு வந்த அந்த எஸ்எம்எஸ்-களையும் அவர் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுபோல யாரேனும் உங்களுக்கு தொலைபேசியில் அழைத்தால் முதலில் அழைத்தவரின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.
இதுபோன்ற எஸ்எம்எஸ் கண்ட உடனே வங்கியில் இருந்து வந்திருக்கிறதா அல்லது ஏதேனும் எண்ணில் இருந்து வந்திருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். உங்களது வங்கி கணக்கில் லாகின் செய்து பார்த்து பணம் வந்திருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிதி சோப்ரா அதில் பதிவிட்டுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications