இந்தியாவின் ஐடி தலைநகரம், சிலிக்கான் சிட்டி என்று அழைக்கப்படும் பெங்களூரில் வெளிமாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். அந்நகரில் தற்போதுள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கை மற்றும் விமான போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.
இதனால் பெங்களூருக்கு அருகிலேயே 2வது விமான நிலையத்தை உருவாக கர்நாடக அரசு முடிவு செய்தது. மேலும், இரண்டாவது சர்வதேச விமான நிலையத்துக்காக, பெங்களூரு நகரின் மையத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள 3 இடங்களை அம்மாநிலம் அடையாளம் கண்டுள்ளது.

அந்த 3 இடங்களில் ஏதாவது ஒன்றில் பெங்களூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு தனது முன்மொழிவை கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளது.
இந்நிலையில், விமான நிலையத்துக்கான இடம் முற்றிலும் தகுதியின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் எம்.பி. பாட்டீல் தெரிவித்தார். கர்நாடக உள்கட்டமைப்பு துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் கூறியதாவது: விமான நிலையம் அமைப்பதற்காக நாங்கள் 3 பெயர்களை (மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு) அனுப்பியுள்ளோம்.
மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகு நாங்கள் டெல்லி செல்வோம். விமான நிலைய ஆணையம் தள ஒப்புதலுக்காக வருகை தர வேண்டும், அது அவர்களின் பணி. பின்னர் சாத்தியக்கூறு, நம்பகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மாநில அரசு முடிவு செய்யும். போக்குவரத்து இணைப்பை மனதில் கொண்டு தளங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், 50 கி.மீ.க்குள் இருக்க வேண்டும். இடம் மிக தொலைவில் இருந்தால் முதலீடு செய்ய யாரும் வரமாட்டார்கள். நாங்கள் நிலம் கொடுப்போம், ஆனால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வர வேண்டும். முதலீடு செய்வதற்கு முன் சாத்தியக்கூறு மற்றும் நம்பகத்தன்மையை அவர்கள் கருத்தில் கொள்வார்கள்.
எங்காவது நிலத்தை கொடுத்து விமான நிலையத்தை கட்ட சொன்னால் யாரும் முதலீடு செய்ய வரமாட்டார்கள். நிலம் கொடுப்பது எங்கள் பொறுப்பு, மீதமுள்ளவை பிபிபி மாதிரியில் இருக்கும். பெங்களூருவின் இரண்டாவது விமான நிலையம் குறித்த முடிவு தகுதியின் அடிப்படையில் மட்டுமே எடுக்கப்படும்.
விமான நிலைய இடத்துக்கான முடிவை எடுக்கும்போது, பெங்களூரு, அதன் குடியிருப்பாளர்கள், தொழில்கள் மற்றும் பொருளாதாரத்தின் நலன்களை கருத்தில் கொண்டு நாங்கள் ஒரு முடிவை எடுப்போம் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். நிலம் தேர்வு செய்வதில் இதுவரை நான் எந்த அழுத்தத்திற்கும் அடி பணியவில்லை, எதிர்காலத்திலும் அசைந்து கொடுக்க மாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications