டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள் இந்தியாவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன. ஒவ்வொரு நாளும் மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த 68 வயதான முதியவர் ஒருவர் இரையாகியுள்ளார். இந்த முதியவர் தன்னுடைய பிக்சட் டெபாசிட்டில் இருந்த 1.94 கோடியை மோசடிக்காரர்களால் இழந்துள்ளார். இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
மோசடி எப்படி நடந்தது?: டெக்கான் ஹெரோல்டின் அறிக்கையின் படி பாதிக்கப்பட்ட முதியவருக்கு நவம்பர் 30-ஆம் தேதி அன்று ஆள் பேர் தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸப்பில் வீடியோ கால் வந்துள்ளது. அப்போது அழைப்பாளர் தன்னை மும்பை குற்றப்பிரிவு அதிகாரி என்று சொல்லி முதியவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். வீடியோ அழைப்பில் அவருடைய பேக்ரவுண்டும் காவல் நிலையத்தில் இருப்பது போலவே காண்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் பண மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக மோசடி செய்பவர்கள் அந்த முதியவரிடம் குற்றம் சாட்டியுள்ளனர். அழைப்பாளரின் தோனி பார்ப்பதற்கு எதார்த்தமாகவும், போலியானது போல இல்லாமலும் இருந்ததால் அந்த முதியவர் உண்மை என்று நம்பியுள்ளார். அதன் பிறகு கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தாங்கள் சொல்வதைக் கேட்குமாறு மோசடிக்காரர்கள் வற்புறுத்தியுள்ளனர்.
அதற்கு இணங்க இந்த முதியவரும் அவர்கள் சொல்லும் விஷயங்களுக்கு இணங்கியுள்ளார். மேலும் பண மோசடி செய்யும் ஒருவரிடம் இருந்து கமிஷன் பெற்றதாகவும் அந்த முதியவரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்த முதியவர் பயந்து போய் அவர்கள் சொல்வதற்கு இணங்க செயல்பட்டுள்ளார். பிறகு மோசடி செய்பவர்கள் டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறிய அவரை வீட்டிலேயே தனிமையில் இருக்கச் சொல்லி இருக்கின்றனர். அப்போது மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்ட முதியவரிடம் வங்கி விவரங்களை வழங்குமாறும் வற்புறுத்தியுள்ளனர்.
இதனால் வெறும் 7 நாட்களில் பல தவணைகளின் மூலம் 1.94 கோடியை அந்த முதியவர் மோசடிக்காரர்களின் கணக்குக்கு மாற்றியுள்ளார். எந்த ஒரு அரசாங்க அதிகாரியும் மொபைலில் தொடர்பு கொண்டு உங்கள் தனிப்பட்ட விவரங்களை கேட்க மாட்டார்கள். எனவே இது போன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்தால் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். என்னதான் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்தாலும், இன்னமும் ஏமாறும் மக்களின் எண்ணிக்கையில் எந்தவித குறைவும் இல்லை.
ஏதேனும் பெரிய குற்றங்கள் நடந்திருந்தால் அரசாங்க அதிகாரிகள் வீட்டிற்க்கே வந்து கைது நடவடிக்கையில் ஈடுபடுவார்களே ஒழிய இது போன்ற ஆன்லைன் அரெஸ்ட் நடக்காது. எனவே இது போன்ற போலி அழைப்புகள் உங்களுக்கு வந்தால் எச்சரிக்கையுடன் இருங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் விஷயங்கள் குறித்து உங்கள் குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாத விஷயங்கள் அவர்களுக்கு தெரியலாம். ஒருவேளை தெரியாதவர்கள் இருந்தாலும் அவர்களுக்கு டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். இதன் மூலம் இனி வரும் நாட்களில் நடக்கவிருக்கும் மோசடிகளைத் தடுக்கலாம்.


Click it and Unblock the Notifications