டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து நாளுக்கு ஒரு மோசடி சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதன்படி இன்றும் ஒரு மோசடி சம்பவத்தை தான் பார்க்கவுள்ளோம். பெங்களூருவில் வசிக்கும் 39 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் "டிஜிட்டல் அரெஸ்ட்" மோசடியில் சிக்கி 11.8 கோடி ரூபாயை இழந்துள்ளார். போலீஸ் அதிகாரிகளை போலவே ஆள் மாறாட்டும் செய்து பணம் மோசடியில் ஈடுபட்டு மோசடி பேர்வழிகள் இந்த சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர். இந்தச் சம்பவம் எப்படி நடந்தது? மோசடிக்காரர் வலையில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் எப்படி சிக்கினார்? என்ற விவரங்கள் குறித்து பார்ப்போம்.
மோசடி சம்பவம் எப்படி நடந்தது?: பாதிக்கப்பட்ட நபருக்கு நவம்பர் 11-ஆம் தேதி அன்று ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரி என்று கூறிக்கொண்டு பாதிக்கப்பட்டவரிடம் ஒருவர் பேசியுள்ளார். மேலும் மோசடிக்காரர் பாதிக்கப்பட்டவரிடம் அவருடைய சிம் கார்டு சட்ட விரோத விளம்பரங்கள் மற்றும் செய்திகளை அனுப்ப பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

அதோடு மும்பை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவரின் பெயரில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொய்யாக கூறியுள்ளார். விரைவில் அவருக்கு போலீஸ் அதிகாரி போல நடிக்கும் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்தது. பண மோசடிக்காக வங்கி கணக்குகளை திறக்க பாதிக்கப்பட்டவரின் ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர் டிஜிட்டல் விசாரணைக்கு இணங்கவில்லை என்றால் கைது நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் மோசடிக்காரர்கள் மிரட்டியுள்ளனர்.
மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவரை ஸ்கைப் டவுன்லோட் செய்ய சொல்லி பரிந்துரைத்துள்ளனர். அதன்படி பாதிக்கப்பட்டவரும் ஸ்கைப் டவுன்லோட் செய்தார். அப்போது போலீஸ் சீருடையில் ஒருவர் தோன்றி தொழிலதிபர் ஒருவரின் அக்கவுண்டில் இருந்து ரூ.6 கோடி மதிப்பிலான பரிவர்த்தனையை செய்ய பாதிக்கப்பட்ட சாஃப்ட்வேர் இன்ஜினியரின் ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டதாக பொய்யாக கூறினார்.
இதைக் கேட்ட அந்த நபருக்கு ஷாக் ஆகியுள்ளது. உடனே நவம்பர் 25-ஆம் தேதி மீண்டும் ஒருவர் போலீஸ் சீருடையில் தோன்றி ஏமாற்றுவதை தொடர்ந்தனர். தாங்கள் சொல்வதற்கு இணங்க தவறினால் குடும்பத்தையும் சேர்த்து கைது செய்ய இருப்பதாக மிரட்டினர். மோசடி செய்பவர்கள் மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் போலியான வழிகாட்டுதல்களை வழங்கி பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்குகளை சரி பார்க்கும் பொருட்டு சில தனிப்பட்ட விவரங்களை கோரியுள்ளனர்.
கைது செய்யப்பட்டு விடுவோம் என்ற பயத்தில் பாதிக்கப்பட்டவர் பல பரிவர்த்தனைகளின் மூலம் 11.8 கோடியை மோசடிக்காரர்களின் வங்கி கணக்குக்கு மாற்றியுள்ளார். மோசடிக்காரர்கள் இதையும் தாண்டி அதிக பணம் கேட்டபோதுதான் தான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து போலீசில் புகார் அளித்தார்.
காவல் துறையினர் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளனர். யாரென்று தெரியாத நபரிடம் எப்படி இவ்வளவு தொகையை ஏமாறுகின்றனர் என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. அதுவும் கோடிகளில் ஏமாறும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்துவிட்டன. 11 கோடி என்பது எளிதாக புரட்டக்கூடிய தொகை கிடையாது. படித்த நபர்களே இப்படி ஏமாறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications