இன்றைய டிஜிட்டல் உலகில் நாளொன்றுக்கு ஒரு மோசடி சம்பவமாவது எங்கோ ஒரு மூலையில் நடக்கிறது. இதில் சிக்கி அப்பாவி மக்கள், தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை பறிகொடுக்கின்றனர். ஆண்ட்ராய்டு பயன்பாடு அதிகரிக்க தொடங்கியதிலிருந்து நம்மில் பலர், எந்த சேவை பெற வேண்டுமானாலும் அதற்கான நம்பரை கூகுளில் தேடி வருகிறோம். அப்படித்தான் பேங்க் மேனேஜர் ஒருவரும் கஸ்டமர் கேர் நம்பரை தேடியுள்ளார். அப்படி தேடிய அவர் ஒரு மோசடிக்காரரிடம் சிக்கி ரூ.2.5 லட்சத்தை இழந்துள்ளார்.
ஒரு பேங்க் மேனேஜருக்கே இந்த நிலைமை என்றால்? சாமானியர்களாகிய நாம் எவ்வளவு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்? இந்த பதிவில் அவருக்கு என்ன நடந்தது? இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற விவரங்களைப் பார்ப்போம்.
சவுத் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிகிறார் 32 வயதான இளைஞர். இவர் தன்னுடைய விடுமுறை நாட்களை சிறப்பாக கழிப்பதற்காக சக்கலேஷ்பூரில் உள்ள ஒரு ரெசார்ட்டை முன்பதிவு செய்துள்ளார். அதற்காக "Agoda" என்ற டிஜிட்டல் தளத்தின் மூலம் ரூ.19,000 பணமும் செலுத்தியுள்ளார். ஆனால் அன்றைய தினம் சாயங்கால வேலையில், சில தனிப்பட்ட காரணங்களை கருத்தில் கொண்டு தனது பயண முடிவை ரத்து செய்துள்ளார்.

கட்டிய பணத்தை ரீஃபண்ட் பெற வேண்டும் என்ற பதற்றத்தில், பேங்க் மேனேஜர் செய்த ஒரே ஒரு தவறு தான் மொத்த பணமும் மோசடிக்காரர்களின் கைக்கு செல்ல காரணமாக மாறியது. தான் முன்பதிவு செய்த "Agoda" அப்ளிகேஷனில் கஸ்டமர் கேர் நம்பரைத் தேடாமல் கூகுளில் "Agoda customer care number" என்று தேடியுள்ளார்.
அப்போது "8000501620" என்ற நம்பர் கிடைத்துள்ளது. மறுமுனையில் பேசிய மோசடிக்காரர் Agoda நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரை போலவே பேசியுள்ளார். இதனால் பேங்க் மேனேஜருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை வந்துள்ளது. அப்போது மோசடிக்காரர், பேங்க் மேனேஜரிடம் தான் ஒரு APK ஃபைலை அனுப்புவதாகவும், அதில் விவரங்களை வழங்குமாறும் தெரிவித்தார்.
அதில் பேங்க் மேனேஜர் தன்னுடைய பெயர் பிறந்த தேதி போன்ற விவரங்களை எல்லாம் வழங்கியுள்ளார். ஆனால் மோசடிக்காரர்கள் யுபிஐ பின் நம்பரையும் கேட்டுள்ளனர். உடனே உஷாரான பேங்க் மேனேஜர், அழைப்பை துண்டித்துள்ளார். ஆனால் அவர் சுதாரித்துக் கொள்வதற்கு முன்னரே தீங்கு விளைவுக்கும் மால்வேரை பேங்க் மேனேஜரின் போனில் இன்ஸ்டால் செய்துவிட்டனர்.
இதனால் மே 10-ஆம் தேதி காலை 7.57 மணிக்கு, பேங்க் மேனேஜரின் வங்கி கணக்கிலிருந்து ரூ. 99,865 எடுத்துள்ளனர். அதன் பிறகு அதே நாள் காலை 8.14 மணிக்கு 42,181 ரூபாயையும், 8.16 மணிக்கு 48,025 ரூபாயையும், 8.19 மணிக்கு 49,863 ரூபாயையும், 8.20 மணிக்கு 8,102 ரூபாயையும் அபகரித்துள்ளனர். இப்படி தொடர்ந்து மொத்தமாக தங்கள் கணக்கிற்கு ரூ.2,48,036 -த்தை மாற்றியுள்ளனர்.
அதன் பின்னர் நடந்த விசாரணையில் பிரபல நிறுவனங்களின் பெயர்களில் போலி எண்களை கூகுளில் மோசடிக்காரர்கள் பதிவேற்றம் செய்வது தெரியவந்தது. எனவே மக்கள் அவசரத்தில் அதை உண்மை என்று நம்பி ஏமாற வேண்டாம். இணையத்தில் கிடைக்கும் நம்பரை நம்புவதற்கு பதிலாக, அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ அப்ளிகேஷனை பயன்படுத்தலாம். ஒரு வேலை உண்மையிலேயே நிறுவனத்தின் சார்பில் ரீஃபண்ட் கொடுக்கப்பட்டால் அது நேரடியாக உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும்.
மாறாக அடையாளம் தெரியாத நபர்கள் ஏதேனும் லிங்க் அனுப்பினால் கண்டிப்பாக ஏமாற வேண்டாம். அதுவும் APK ஃபைல் போன்றவற்றை உண்மையிலேயே இயங்கி வரும் நிறுவனங்கள் அனுப்பாது. எனவே மோசடிக்காரர்களின் வலை என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் முன் பதிவு செய்த அப்ளிகேஷனில் "Help" அல்லது "Contact Us" என்ற பகுதி இருக்கும். இதன் மூலம் கஸ்டமர் கேர் நம்பரை எடுத்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications