மும்பை: பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் துணை நிறுவனம் பாரதி ஹெக்ஸாகாம். இந்த நிறுவனம் வடகிழக்கு மாநிலங்களில் செல்போன் சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிறுவனத்தின் ஐபிஓ ஒரு வார காலத்தில் வெளியாக இருக்கிறது. இந்த நிறுவனத்தில் மத்திய அரசு நிறுவனமான டிசிஐஎல் வைத்திருக்கும் பங்குகள் இந்த ஐபிஓ மூலம் விற்பனைக்கு வருகின்றன.

பாரதி ஹெக்ஸாகாம் ஐபிஓ: பாரதி ஹெக்ஸாகாம் நிறுவனத்தின் ஐபிஓ ஏப்ரல் 3ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அன்று தொடங்கி 5ஆம் தேதி வரை சில்லறை முதலீட்டாளர்கள் இந்த ஐபிஓ-விற்கு விண்ணப்பிக்க முடியும். இந்த ஐபிஓ வெளியீட்டிற்கு முக்கிய காரணம் டிசிஐஎல் என அழைக்கப்படும் மத்திய அரசின் தேசிய தொலை தொடர்பு ஆலோசனை நிறுவனம் பாரதி ஹெக்ஸாகாமில் உள்ள தனக்கு சொந்தமான 15% பங்குகளை ஆஃபர் ஃபார் சேல்ஸ் மூலம் விற்கிறது.
மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தொலை தொடர்பு ஆலோசனை நிறுவனம் உலகெங்கிலும் வளரும் நாடுகளுக்கு தொலை தொடர்பு துறையில் ஆலோசனை வழங்குவதற்காக 1978 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது பாரதி ஹெக்ஸாகாமி 30% பங்குகளை வைத்திருக்கிறது. இதில் தற்போதைக்கு15% பங்குகள் ஐபிஓ மூலம் விற்பனைக்கு வருகின்றன.
அதாவது நிறுவனத்தின் பங்குகளில் 7.5 கோடி பங்குகள் ஐபிஓ வழியாக விற்கப்பட உள்ளன.பாரதி ஏர்டெல் நிறுவனம், பாரதி ஹெக்ஸாகாமில் 70 % பங்குகளை வைத்துள்ளது. அதாவது 35 கோடி பங்குகள் தாய் நிறுவனமான பாரதி ஏர்டெல்லிடமே உள்ளன.
ராஜஸ்தான் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பாரதி ஹெக்ஸாகம் மொபைல் சேவைகள், பிராட்பேண்ட் சேவைகளை வழங்கி வருகிறது. இதில் அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் அடங்கும். பாரதி ஹெக்ஸாகாமின் ரெவென்யூ பெர் யூசர் என்பது 2021ஆம் நிதி ஆண்டில் 135 ரூபாயாக இருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு 195 ரூபாய் என உயர்வு கண்டுள்ளது.
செப்டம்பர் மாத கணக்கீட்டின்படி இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை என்பது 29.1 மில்லியன் ஆகும். பாரதி ஹெக்ஸாகாம் நிறுவனம் செப்டம்பர் உடனான காலாண்டு வரை 3,420 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. ஆனால் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதன் வருவாய் குறைந்திருக்கிறது.
அண்மையில் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பத்திர நிதிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டன. இதில் பாரதி ஏர்டெல்லின் கீழ் செயல்படும் இரண்டு நிறுவனங்கள் மூலம் ரூ.234 கோடி பாஜகவிற்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்டது தெரிய வந்தது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications