எந்தவொரு துறையிலும் நாம் சாதிக்க வேண்டும் என்றால், கடினமாக உழைக்க வேண்டும் என்பது நிதர்சனம் ஆனால் அதற்கு முன் முதலில் உள்ளுக்குள் அணையாத ஆசை இருக்க வேண்டும். டாடா, பிர்லா, அம்பானி மற்றும் அதானி போன்ற தொழிலதிபர்களால் ஈர்க்கப்பட்டு நாமும் அவர்களை போல் உயர வேண்டும் என்று ஆசைப்பட்டு வர்த்தக துறையில் களம் இறங்கி சாதித்தவர்கள் அதிகம்.
அவர்களில் ஒருவர் தான் பிரபலமான குளிர்பானமான பிந்து மசாலா சோடாவின் தலைவர் சத்ய சங்கர். ஆட்டோ டிரைவாக வாழ்க்கையை தொடங்கி இன்று ரூ.800 கோடி மதிப்பிலான நிறுவனத்தின் தலைவராக உயர்ந்துள்ளார்.

கர்நாடக மாநிலம் புத்தூர் அருகே உள்ள பெல்லாரே கிராமத்தில் ஒரு விவசாய சமூகத்தில் பிறந்து வளர்ந்தவர் சத்ய சங்கர். ரிலையன்ஸ் நிறுவனர் மறைந்த திருபாய் அம்பானியின் வெற்றி வரலாறு இவருக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நாமும் அவரை போல் சாதிக்க வேண்டும் என்ற விதை அவருக்குள் விழுந்தது.
அதேசமயம் எடுத்தவுடனே வணிகத்தில் இறங்கி அவர் மளமளவென முன்னேறிவிடவில்லை. அரசாங்கத்தின் சுயவேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ், ஆட்டோ ரிக்ஷா வாங்கி ஒரு டிரைவராக தனது தொழில்முனைவோர் பயணத்தை தொடங்கினார்.
ஒரே ஆண்டில் ஆட்டோவுக்கான கடனை அடைத்து தனது தொழில் மற்றும் நிதி நிர்வாக திறமையை வெளிப்படுத்தினார். இதனையடுத்து அவரது இலக்கு ஆட்டோவிலிருந்து அம்பாசிடர் காராக உயர்ந்தது. நினைத்தது போல் அம்பாசிடர் காரும் வாங்கினார்.
சரி டாக்ஸி டிரைவர் ஆகி விட்டோம் என்று சத்ய சங்கர் திருப்தி அடையவில்லை. 1987ல் ஆட்டோ கேரேஜ் துறைக்கு மாறி, ஒரு டயர் டீலர்ஷிப்பை தொடங்கினார். இது பல்வேறு தொழில் சூழல்களுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைத்து மற்றும் வளரக்கூடிய அவரது திறனை வெளிப்படுத்தின.
இந்த சூழ்நிலையில், 2002ம் ஆண்டு அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஆண்டில் வட இந்தியாவுக்கு ஒரு வேலை விஷயமாக சென்று இருந்தார் அப்போது அங்குள்ள உள்ளூர் பானமான ஜீராவை குடித்தார். அதன் தனித்துவமான சுவை அவரை ஈர்த்தது.
இதனையடுத்து, நம் மாநிலத்தில் தயாரித்து விற்கலாமே என்ற யோசனை அவருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து பிந்து ஜீரோ மசாலா சோடாவை சந்தையில் அறிமுகம் செய்தார். ரூ.35,00,000 முதலீட்டில் எஸ்.ஜி. கார்ப்பரேட்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். நிறுவனம் அதிவேக வளர்ச்சி கண்டது.
2006ல் நிறுவனத்தின் வருவாய் ரூ.6 கோடியாக உயர்ந்தது. 2010ல் அந்நிறுவனத்தின் வருவாய் ரூ.100 கோடியை கடந்து புதிய மைல்கல்லை எட்டியது. இருப்பினும் விஜய சங்கரின் வெற்றி தாகம் தீரவில்லை. 2015ல் ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு பிந்து ஜீரா சோடாவை ஏற்றுமதி செய்து ஒரு புத்தியாயத்தை எழுதினார்.
இன்று ரூ.800 கோடி நிறுவனமாக பிந்து ஜீரோ மசாலா சோடா உயர்ந்து நிற்கிறது. இது சத்ய சங்கரின் தொலைநோக்கு பார்வைக்கும், தொழில்முனைவோர் அறிவுதிறனுக்கும் சான்று என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.


Click it and Unblock the Notifications